கோவை மாநகரில் காந்திபுரத்தில் இருந்து கணபதி செல்வதற்குச் சத்தி சாலையைத் தவிர சித்தாபுதூர் சந்திப்பும் பயன்படுத்தப்படுகிறது.

நவ இந்தியா வழியே வரக்கூடிய வாகனங்கள், உமன்ஸ் பாலிடெக்னிக் கல்லூரி வழியே ஆவாரம்பாளையம் நோக்கி கணபதி செல்லக்கூடிய வாகனங்கள் பலவும் இந்தச் சாலையைப் பயன்படுத்துகின்றன.

சில நாட்களுக்கு முன்பு பொதுப் பணிகளுக்காக சித்தாபுதூர் பகுதியில் ராமகிருஷ்ணா மருத்துவமனை செல்லக்கூடிய பிரதான சாலைப் பகுதியின் இரு இடங்களில் பெரும் குழிகள் தோண்டப்பட்டன.

தோண்டப்பட்ட ஒரு பகுதியில் குழி மூடப்பட்டுள்ளது. மறுபுறம் உள்ள குழி இன்னும் மூடப்படவில்லை என்பதால் அவ்வழியே செல்லக்கூடிய வாகனங்கள் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.

காந்திபுரத்தில் இருந்து இந்தச் சந்திப்பில் திரும்பக்கூடிய வாகனங்கள் மற்றும் நவ இந்தியா வழியே வந்து இந்தச் சந்திப்பில் திரும்பக்கூடிய வாகனங்கள் குழி இருப்பதால் மெதுவாக நகர்கின்றன.

வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கும்படி எந்தத் தடுப்புகளும் ஒளிரும் பட்டைகளும் இங்கே அமைக்கப்படவில்லை. ட்ராபிக் சிக்னலிலும் சில குறைபாடுகள் உள்ளன. இத்துடன் இப்பகுதி வழியே சிக்னலில் நிற்காமல் பறக்கும் சிறுவர்களின் சேட்டைகளும் அதிகமாக உள்ளன.

இந்த வழியை மருத்துவமனைக்குச் செல்லும் பலரும் பயன்படுத்துகின்றனர். மருத்துவமனையில் இருந்து வெளியே செல்லக்கூடிய வாகனங்கள் செல்லும் வழியில் குழி இல்லை என்றாலும், மருத்துவமனையை நோக்கி வரக்கூடிய ஆம்புலன்ஸ்கள் இந்த வழியே வரும்போது மிகக் கவனமாகவும் நிதானமாகவும் வர வேண்டியுள்ளது.

இந்த வழியே ஒரு பள்ளி, ஒரு மகளிர் கல்லூரி, ஒரு பிரபல மருத்துவமனை ஆகியவை அமைந்துள்ளன. மேலும், நவ இந்தியா வழியே அமைந்துள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பிற பகுதிகளுக்குச் செல்ல இந்தச் சாலையைப் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக இங்கு வாகனப் போக்குவரத்து மாலை நேரங்களில் அதிகமாக இருக்கும்.

இதைக் கருத்தில் கொண்டு இந்தச் சாலையில் முதற்கட்டமாகத் தடுப்புகள் வைக்க வேண்டும். அந்தத் தடுப்புகளில் ஒளிரும் பட்டைகளைக் கட்ட வேண்டும். இங்கு நடைபெறக்கூடிய பொதுப் பணியை விரைவாக முடித்துச் சாலையைச் சரியான முறையில் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கேட்டுக்கொள்கின்றனர்.

கூடுதல் தகவல்:

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேதமடைந்த தார் சாலைகளைச் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  1. மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சேதமடைந்த தார் சாலைகளைச் சீரமைக்கும் பணிக்காக 1,846 இடங்களில் 28,733 சதுர மீட்டர் பரப்பளவு கணக்கெடுக்கப்பட்டு, இதுவரை 605 தார் சாலைகளில் 11,255 சதுர மீட்டர் அளவிலான சாலைகள் மற்றும் பள்ளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன என மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.