கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில், செப்பேடுகள், தொன்மையான கலைப்பொருட்கள் மற்றும் பண்டைய அறிவியல் சிந்தனைகள் குறித்த இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நவம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையுடன், கல்லூரியின் தமிழ்த்துறை, இந்தோனேசியாவின் உதயண பல்கலைக்கழகம் மற்றும் புலம் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் ஆகியவை இணைந்து இக்கருத்தரங்கை நடத்துகின்றன.

‘பாரதத்தின் எதிரொலிகள்: தொன்மை, கலைப்பொருட்கள் மற்றும் பண்டைய ஞானம்’ என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கின் தொடக்க விழா, நவம்பர் 20-ம் தேதி காலை 10.30 மணிக்கு கல்லூரி வளாகத்திலுள்ள முனைவர் மா. ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெறுகிறது.

இதில், செப்பேடுகள் மற்றும் தொல்பொருட்களின் வாயிலாகத் தமிழர்களின் பண்பாடு, நிர்வாகத் திறன், வணிக மேன்மை, மொழி வளர்ச்சி, உலகளாவிய பண்பாட்டுத் தொடர்புகள் மற்றும் தொன்மையான அறிவியல் சிந்தனைகள் குறித்து ஆய்வாளர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

விருது வழங்கும் விழா

கருத்தரங்கின் சிறப்பு நிகழ்வாக, இசை மற்றும் தமிழ்ப்பணியில் சிறந்து விளங்கும் பத்மஸ்ரீ ஓதுவார் திருத்தணி சுவாமிநாதனுக்கு ‘கொங்குநாடு செந்தமிழ்ச் செம்மல்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.

120 ஆய்வுக் கட்டுரைகள் வெளியீடு

மேலும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களிடமிருந்து பெறப்பட்ட 120 ஆய்வுக் கட்டுரைகள் இரண்டு தொகுதிகளாக நூல் வடிவில் வெளியிடப்பட உள்ளன. இரண்டு நாட்களிலும் மொத்தம் எட்டு ஆய்வரங்குகள் நடைபெற உள்ளன.