தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் வெப்ப அலை பாதிப்பிலிருந்து பாதுகாப்பாக இருக்க மாநிலம் முழுவதும் அரசு மருத்துவ அமைப்புகளில் இலவசமாக ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் காலை 7 மணி முதலே சூரியன் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. பல பகுதிகளில் வெப்பநிலை கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒரு சில மாவடங்களில் அடுத்த சில நாட்களில் தற்போதைய வெப்பநிலையை விட மேலும் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வெப்ப அலை காரணமாக பொதுமக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு மற்றும் வெப்பக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி சுகாதார நிலையங்களில் இலவசமாக ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க நடவடிக்கை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவு ஓ.ஆர்.எஸ். கரைசல் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் அவற்றை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாய கூலி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட வெயிலில் அதிக நேரம் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமையுடன் ஓ.ஆர்.எஸ். வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், வெப்ப அலை பாதிப்புக்கான சிகிச்சை வழங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் ஹீட் ஸ்ட்ரோக் சிறப்பு வார்டுகள் அமைக்கவும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
