கோவை மாநகரின் முதன்மை குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவைத் தடுத்து, அணையின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.18 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கையில்: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் முத்திக்குளம் வனப்பகுதியில் அமைந்துள்ள சிறுவாணி அணையிலிருந்து, புவியீர்ப்பு விசை மூலம் குறைந்த மின்சாரச் செலவில் கோவை மாநகருக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இரு மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தின்படி, அணையின் முழு நீர்த்தேக்க மட்டம் 878.50 மீட்டராகவும் (49.53 அடி), முழு கொள்ளளவு 650 மில்லியன் கன அடியாகவும் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால், அணையின் சுவர் மற்றும் கட்டமைப்பு வழியாக நாளொன்றுக்கு சுமார் 10 முதல் 15 மில்லியன் லிட்டர் வரை அதிகப்படியான நீர் கசிவு ஏற்படுவதால், அணையின் நீர் ஊடுருவல் சுரங்கப்பாதை முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அணையின் நீர்மட்டம் 44.00 முதல் 44.50 அடியாக மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், கோடைக் காலங்களில் கோவை மாநகரின் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது; இதனைச் சமாளிக்க, பாதிக்கப்பட்ட வார்டுகளுக்குப் பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தற்காலிகமாக நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கேரள நீர்ப்பாசனத் துறை மற்றும் புனேவில் உள்ள மத்திய நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள் குழுவினர் அணையில் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கலவையுடன் கூடிய அழுத்தப்பட்ட சிமெண்ட் கிரவுட்டிங் முறையில் நீர் கசிவைத் தடுத்து அணையின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், மேற்பரப்பு சேதங்களைக் கண்டறிய நீருக்கடியில் வீடியோகிராபி மற்றும் RCC சுவரில் அழிவில்லாத சோதனைகளை மேற்கொள்ளவும், கிரவுட்டிங் பணிகளின் தரத்தை உறுதி செய்ய டோமோகிராபி ஆய்வுகளை நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற 30-வது கூட்டுக் கட்டுப்பாட்டு வாரிய கூட்டத்தில், நீர் கசிவு தடுப்புப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் பட்சத்தில், அணையில் கூடுதலாக 125 மில்லியன் கன அடி நீரைத் தேக்கி, நீர்மட்டத்தை மீண்டும் 49.50 அடி வரை உயர்த்தி, முழு கொள்ளளவான 650 MCFT நீரைச் சேமித்து கோவை மாநகருக்குத் தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய முடியும்.
இத்திட்டத்திற்காகத் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. இதன் மூலம் கோவை மாநகரப் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
