கோவையில் ரூ. 408 கோடி மதிப்பில் நிறைவடைந்த 89 திட்டப் பணிகளை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். மேலும், ரூ. 32.32 கோடி மதிப்பிலான 144 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அவர், 9,343 பயனாளிகளுக்கு ரூ. 34.72 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

5b 4 scaled

கோவை காந்திபுரத்தில் சிறைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

5c 2 scaled

மொத்தம் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில், எட்டு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகம், ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக நூலகம், 350 பேர் அமரக்கூடிய நவீன அரங்கம் மற்றும் அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் மையம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

நிகழ்ச்சியின்போது, மாற்றுத்திறனாளிகளின் இருக்கைகளுக்கே சென்று அவர்களுக்கு நவீன செயற்கைக் கால்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.

முதல்வரின் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம், பீளமேடு, ரெட்ஃபீல்ட்ஸ் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. நகரின் பல்வேறு இடங்களில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டதுடன், சுமார் 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.