மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வரும் 21ம் தேதி காலை கோவை மாநகராட்சியை முற்றுகை இடும் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கோவை மாவட்டக் குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:  கடந்த 14ஆம் தேதி மாநகராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 101, 102 தீர்மானங்கள், குடிநீர் இணைப்பு பாதாளச்சாக்கடை இணைப்பு ஆகியவற்றிக்கு கட்டிடங்களின் அளவைக் கொண்டு கட்டணத்தையும் வைப்புத் தொகையையும் அபராதத்தையும் தீர்மானிக்கிறது. இது மக்களை கடுமையாக பாதிக்கும்.

ஏற்கனவே சொத்துவரி உயர்வால் கடும் சிரமத்துக்கு மக்கள் உள்ளாகி இருக்கக்கூடிய சூழலில், மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் – பாதாளச்சாக்கடை கட்டணங்களை மீண்டும் உயர்த்துவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

எல்லாவற்றுக்கும் அபராதம், வைப்பு கட்டணங்கள் எப்போதெல்லாம் உயர்த்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் பழைய இணைப்புதாரர்களும் கட்ட வேண்டும். ஆண்டுக்கு மூன்று சதவீதம் கட்டணம் உயர்வு என்பதெல்லாம் மக்களுடைய பணத்தை கொள்ளையடிப்பதற்கு ஈடாகும்.

பாதாள சாக்கடை ஒரு முறை பணி முடித்தால் 30 ஆண்டுகளுக்கு ஆகும் செலவும் குறைவு. செலவே இல்லாமல் கழிவுகளை வெளியேற்றி மக்களுக்கு சேவை செய்வதற்கு மாறாக உபயோகிப்பாளருக்கு பன்மடங்கு கட்டணம் விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேபோல் கோவை மாநகராட்சியினுடைய குடிநீர் ஆதாரம் இயற்கையின் வரம், இதை விநியோகிக்க கூடிய மாநகராட்சி தொடர்ந்து கட்டணங்கள் உயர்த்தி மக்களை சுரண்டுவதையும், அபராதம் விதிப்பதையும் அனுமதிக்க முடியாது.

எனவே மாநகராட்சி நிர்வாகம், மக்களை கடுமையாக பாதிக்கும் வரி உயர்வுகளை – அபராதத்தை கொண்ட 101, 102 தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வருகிற 21 ஆம் தேதி காலை மாநகராட்சியை முற்றுகை இடுகிற போராட்டத்தை நடத்துகிறது என கூறப்பட்டுள்ளது.