பேரூர் ஆதீனத்தின் 24-ஆவது குரு மகாசன்னிதானம் தெய்வத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘ஒரு கிராமம், ஒரு அரச மரம்’ திட்டம் மார்ச் 20 அன்று பேரூர் ஆதீன வளாகத்தில் துவங்குகிறது.

இதுகுறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (மார்ச் 19) கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. பேரூர் ஆதீனம் 25-ஆவது குரு மகாசன்னிதானம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், காவேரி கூக்குரல் இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், நொய்யல் அறக்கட்டளை அறங்காவலர் ஆறுச்சாமி மற்றும் கோவை கட்டிட கட்டுமானம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராமநாதன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் ஒரு அரச மரம் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, கோயம்புத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 2,000 கிராமங்களில் அரச மரங்கள் நடவு செய்யப்படவுள்ளன. இதில் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம், நொய்யல் அறக்கட்டளை, கோவை கட்டிட ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு, ஓசூர் புவியின் நண்பர்கள் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து செயல்படுகின்றன.

துவக்க விழாவில் பேரூர் ஆதீனத்தின் 25-வது குரு மகாசன்னிதானம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், தவத்திரு சிரவை ஆதீனம், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, திரைப்பட நடிகர் படவா கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.