கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த 48 வயது நபர் மூளைச்சாவு அடைந்ததை தொடர்ந்து, அவரது உடலில் இருந்து பெறப்பட்ட உடல் உறுப்புகள் ஏழு பேருக்கு புதிய வாழ்வை வழங்கியுள்ளது.
கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை ராயல் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்ததையடுத்து, ரவிச்சந்திரனின் குடும்பத்தார் அவரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர்.
தொடர்ந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், கண்கள், தோல் மற்றும் எலும்பு ஆகியவற்றை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைக்கு அளித்தனர்.
தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் விதிமுறைகளின்படி இதயம், கல்லீரல், ஒரு சிறுநீரகம் ஆகிய உடல் உறுப்புக்கள் கோவை ராயல் கேர் மருத்துவமனைக்கு மாற்று அறுவை சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தினர். மற்றொரு சிறுநீரகம், தோல் மற்றும் எலும்பு கோவையிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு பொருத்தினர்.
ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் மாதேஸ்வரன், உறுப்புத் தானம் மூலம் ஏழு பேரின் உயிரைக் காப்பாற்றிய குடும்பத்தினரின் உயர்ந்த மனிதநேய செயலை பாராட்டினார்.
