கோடை காலத்தையையொட்டி ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தந்த வண்ணம் உள்ளனர். ஊட்டியில் ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனை முன்னிட்டு மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் அரசு தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வரும் மே 25ம் தேதி வரை கண்காட்சி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டை காட்டிலும் மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் இந்த ஆண்டு உயர்ந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெரியவர்களுக்கு ரூ.125, சிறியவர்களுக்கு ரூ.75, கேமரா ரூ.100, வீடியோ கேமரா ரூ.500 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்த பூங்காவின் நுழைவு கட்டணம் ரூ.50 ஆக இருந்தது. மலர் கண்காட்சியின் போது ரூ.100 நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்டது.
தற்போது கட்டண உயர்வால் குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர். உதாரணமாக அவர்கள் மலர் கண்காட்சியை பார்வையிட்ட பின், ரோஜா பூங்கா, படகு இல்ல ஏரி, கர்நாடக தோட்டக்கலை துறை பூங்காவுக்கு செல்ல வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் அங்கும் நுழைவு கட்டணம் செலுத்தி பார்வையிட வேண்டும். இதனால் அதிக தொகை செலவிட வேண்டி இருக்கும்.
இதனால் மலர் கண்காட்சி நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.