பொதுவாகவே அனைவருக்கும் பிடித்த ஸ்னாக்ஸ் வகையாக ஸ்வீட் கார்ன் உள்ளது. குறிப்பாக, குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தற்போது அனைத்து இடங்களிலும் ஸ்வீட் கார்ன் கிடைக்கிறது. அதிலும்  மசாலா, இனிப்பு, காரம் என கலவையாக தருவது பலருக்கும் பிடிக்கும். ஸ்வீட் கார்ன் பொதுவாக ஆரோக்கியமான ஸ்நாக் எனக் கருதி பலரும் சாப்பிடுகிறார்கள். ஆனால் இது உண்மையில் உடல்நலத்திற்கு நல்லதா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.

sweeet corn 2 scaled

இதுகுறித்து வீடியோ ஒன்றில் டாக்டர் அருண்குமார் பேசியதாவது: ஸ்வீட் கார்ன் மற்றும் சோளக்கதிர் என்பது காய்கறி வகையை சேர்ந்தது கிடையாது. இவை தானிய வகையைச் சேர்ந்தது. நாம் சாப்பிடும் ஸ்வீட் கார்ன் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை இல்லை.

இயற்கையாகவே சில வகை சோளக்கதிர்களில் (நாட்டுச் சோளம்) பிறழ்வு ஏற்பட்டு, இனிப்பு சுவை உடையதாக இருந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட  இனிப்பு சுவை உடைய இந்த விதைகளை மீண்டும் மீண்டும் விவசாயிகள் பயிரிட்டனர். இதுவே ஸ்வீட் கார்ன் எனக் கூறப்படுகிறது. இது தற்போது பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுவாக சோளக்கதிர் என்பது முத்திய பின்னர் அறுவடை செய்யப்படும். ஆனால் இதில் உள்ள சர்க்கரை ஸ்டார்ச் ஆக மாறுவதற்கு முன்பே ஸ்வீட் கார்ன் அறுவடை செய்யப்படும். இதனால் இயற்கையாகவே இதில் இனிப்பு தன்மை இருக்கும்.

சோளக்கதிர், ஸ்வீட் கார்ன் இரண்டும் 100 கிராம் முதல் 120 கிராம் வரையிலான கலோரிகளை கொண்டுள்ளது. இவை இரண்டிலும் மாவுச்சத்து 20 முதல் 22 கிராம் வரை அளவில் இருக்கும். ப்ரோட்டின் 3 முதல் 4 கிராம் வரை இருக்கும். கொழுப்பு 2 முதல் 4 கிராம் வரை இருக்கும். ஸ்வீட் கார்னில் 6 முதல் 7 கிராம் வரை இயற்கையான சர்க்கரை உள்ளது. சோளக்கதிரில் 1 முதல் 2 கிராம் வரை மட்டுமே சர்க்கரை இருக்கும்.

இவை இரண்டிலும் மாவுச்சத்தின் அளவு ஒன்றாகவே உள்ளது. இவை காய்கறியில் கிடைக்கும் சத்துக்கு நிகரானதும் இல்லை. ஆனால், பிஸ்கட், முறுக்கு, மிக்ஸர், சிப்ஸ் போன்ற ஸ்னாக்ஸ் வகைகளுக்கு மாற்றாக சோளக்கதிர் அல்லது ஸ்வீட் கார்ன் சாப்பிடலாம். பிற ஸ்னாக்ஸ் உடன் ஒப்பிடும்போது இது ஆரோக்கியமானது தான்.

சோளக்கதிர் மற்றும் ஸ்வீட் கார்னை ஒப்பிடும்போது அதன் ஊட்டச்சத்தில் பெரிய அளவில் வேறுபாடு இல்லை. இனிப்பு தன்மை மட்டுமே இதில் வேறுபடும். ஸ்வீட் கார்னை மிகவும் ஆபத்தான உணவு என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.