உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் சாா்பில், ‘சிவகுமாரின் திருக்குறள் 100 திரையிடல்’ நிகழ்ச்சி, டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

7d 1 scaled

தலைமையுரையில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி பேசுகையில்: திருக்குறள் என்பது ஒரு சாதாரணமான படிப்பாக தெரியும். ஆனால் அதில் இருக்கும் பொருள்கள் ஆழமானது. 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள் இன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள், அனைத்து மனிதர்களின் பிறப்பும் சமமானதே என்று கூறுவதோடு, நாம் செய்யும் செயலே நம்மை வேறுபடுத்திக் காட்டுகிறது என்ற அடிப்படை உண்மையை உணர்த்துகிறது.

7b 5 scaled

திரைப்பட துறையில் இருந்தாலும் வாழ்க்கையில் எப்படி ஒழுக்கத்துடன் இருக்கவேண்டும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் சிவகுமார். அவருடைய மனவுறுதி இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒரு உத்வேகத்தை அளிப்பதாக இருக்கும். ஒழுக்கம் விழுப்பம் தரும் என்ற குறளின் வார்த்தையை கடைபிடித்து வாழ்பவர் அவர். ஒழுக்கமும், உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் எந்த நிலையை வேண்டுமானாலும் அடையலாம். மாணவர்கள் கல்வி கற்கும் வயதில் ஒழுக்கத்துடன் கூடிய வாழ்வை வாழ்ந்தால் மட்டுமே பிரகாசிக்க முடியும் என்றார்.

7a 8 scaled

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகுமார் பேசுகையில்: திருக்குறளை உரையாக மட்டுமில்லாமல், அதனை கதை வடிவில், நடந்த நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுக் கூறினால் எளிமையாக புரியும் என்பதை விளக்கினார். வாழ்வில் அளப்பரிய சாதனைகளைப் புரிந்த கர்மவீரர் காமராஜரின் வாழ்வியல் எளிமையைப் பற்றிக் கூறினார். தான் சிறிய வயதில் வாழ்வில் அடைந்த துன்பங்களை எப்படி நேர்மறையாக எடுத்துக் கொண்டு கடுமையாக உழைத்து இத்தகைய உயரத்தை அடைந்த சிறப்பை விளக்கினார்.

7c 2 scaled

இதனைத் தொடர்ந்து கதைகளின் வாயிலாகத் திருக்குறள் 100க்கும், சிவகுமார் அளித்த விளக்கங்கள் காணொளிக்காட்சியாக மாணவர்களுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டது. நிகழ்வில் டாக்டர் என்.ஜி.பி.கல்விக்குழுமங்களின் கல்விசார் இயக்குநர் முத்துசாமி,  கல்லூரியின் முதல்வர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.