கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கை சுற்றியுள்ள செட்டிபாளையம் ரோடு, ஸ்ரீராம் நகர், அன்பு நகர், இந்திரா நகர், மேட்டுத்தோட்டம் மற்றும் சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகக் கடுமையான துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஆண்டுதோறும் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் காற்றின் திசை மாறுவதால், குப்பை கிடங்கின் துர்நாற்றம் குடியிருப்பு பகுதிகளை நோக்கி 24 மணி நேரமும் தொடர்ச்சியாக வீசுகிறது. குப்பையை உரமாக்கும் செயல்பாட்டின் போது அதைக் கிளறிவிடும்போதும், ரசாயனக் கலவைகளைச் சேர்க்கும்போதும் இந்த நாற்றம் பல மடங்கு தீவிரமடைவதாகக் கூறப்படுகிறது.

குப்பை கிடங்கு விவகாரம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது. அந்தப் பகுதியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மோகன் இதுகுறித்து சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டலத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.

சமீபத்தில் இவ்விவகாரம் தொடர்பாக கோவை மாநகராட்சி நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தின் முன் செய்துள்ள 156 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை மாநகராட்சி ஆணையரே தாக்கல் செய்து இருக்கிறார்.

இதுகுறித்து, சமூக செயற்பாட்டாளர் மோகனிடம் கேட்டதற்கு, அவர் புதிதாக தரம் பிரிக்கப்படாத குப்பைகள் கொண்டுவரப்படுவதில்லை என மாநகராட்சி தீர்ப்பாயத்தின் முன் உறுதியளித்திருந்தாலும், நடைமுறையில் 60 முதல் 70 % தரம் பிரிக்கப்படாத குப்பைகள் வளாகத்திற்குள் இயங்கும் ‘கோயம்புத்தூர் இன்டகிரேட்டட் வேஸ்ட் மேனேஜ்மென்ட்’ என்ற நிறுவனத்திடம் நேரடியாகக் கொட்டப்படுவதாக கூறினார்.

மேலும், அந்த அறிக்கையில் உள்ளது போல குபைகிடங்கில் தேங்கியுள்ள பழைய கழிவுகளின் அளவு கிடையாது. அதிலும் பெரும் முரண்பாடுகள் உள்ளன என்கிறார்.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வறிக்கை அங்கு 7 முதல் 12 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகள் இருப்பதாகக் குறிப்பிடும் வேளையில், மாநகராட்சியோ வெறும் 6.75 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே இருப்பதாகக் கணக்குக் காட்டி, அவற்றை அகற்ற மே 2027 வரை கால அவகாசம் கோரியுள்ளது.

இந்த நிலையில் பசுமை தீர்ப்பாயத்தில் நேற்று இதுகுறித்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அதில் மாநகராட்சி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

காலையில் நடைபெற்ற விசாரணையின்போது துணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மட்டுமே ஆஜரான நிலையில், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை மற்றும் குப்பைகளை அகற்ற எடுக்கப்பட உள்ள எதிர்கால திட்டங்கள் குறித்த நீதிபதியின் கேள்விகளுக்கு அதிகாரிகளால் திருப்திகரமான பதில்களை அளிக்க முடியவில்லை.

இதையடுத்து, விசாரணையை சுமார் ஒன்றரை மணி நேரம் ஒத்திவைத்த நீதிபதி, மாநகராட்சி ஆணையரை நேரடியாக காணொலி காட்சி வாயிலாக ஆஜராக உத்தரவிட்டிருக்கிறார்.

தொடர்ந்து ஆணையர் ஆஜரானதும் காரசாரமான விசாரணை நடைபெற்றது. “கழிவு மேலாண்மை விதிகளின்படி குப்பைகளை அந்தந்தப் பகுதிகளிலேயே பரவலாக்கப்பட்ட முறையில் ஏன் கையாள கூடாது? அனைத்து குப்பைகளையும் வெள்ளலூருக்கு மட்டுமே கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன? வெள்ளலூர் என்ற ஒரு இடம் இல்லையென்றால் என்ன செய்திருப்பீர்கள்?” என்று நீதிமன்றம் சரமாரியாகக் கேள்வி எழுப்பியது.

இந்த வழக்கில் விதிகளின்படி மாநகராட்சி நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க கடந்த 4 ஆண்டுகளாகக் கால அவகாசம் வழங்கப்பட்டும் வெள்ளலூர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கடுமையாக வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எதிர்காலத் திட்டங்கள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து முழுமையான மற்றும் திருப்திகரமான புதிய அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்தி வைத்தார்.

நிரந்தர தீர்வு என ஒன்று கிடைக்குமா? 

இந்த விவகாரத்தில் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே வெள்ளலூர் பகுதியை சேர்ந்த மக்கள், சமூக ஆர்வலர்கள் போராடி வருகின்றனர்.

குப்பையை ஓரிடத்தில் குவித்து எரித்து மின்சாரம் தயாரிக்கும் ‘வேஸ்ட்-டு-எனர்ஜி’ திட்டம் இதற்கு உதவுமா என்று அவர்களிடம் கேட்டபோது, இந்த திட்டம் இந்தியா முழுவதும் பரவலாக பல இடங்களில் தோல்வியடைந்துள்ள சூழலில், அத்தகைய திட்டங்களைக் கொண்டுவருவது காற்றில் நச்சு வாயுக்களையும் புற்றுநோய் உள்ளிட்ட நுரையீரல் பாதிப்புகளையும் மட்டுமே ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர்.

இதற்கு மாற்றாக, மண்டலம் வாரியாக குப்பைகளை மேலாண்மை செய்ய மையங்கள் அமைப்பது என்பதே நிரந்தரத் தீர்வாக முன்வைக்கப்படுகிறது.