கோவை, பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மூச்சுக்குழாயில் சிக்கும் உணவுப்பொருட்களை அகற்ற நவீன சிகிச்சைகள் உள்ளன என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஜே.எஸ்.புவனேஸ்வரன், மருத்துவர்கள் பாவை, கார்த்திகேயன், வருண் ஆகியோர் கூறியதாவது: சமீபகாலமாக பலருக்கு மூச்சுக்குழாய், நுரையீரலில் பொம்மை பேட்டரி, ஊசிகள், நாணயங்கள், நிலக்கடலை, விதைகள் போன்ற பொருட்கள் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பேசிக்கொண்டே சாப்பிடும்போது உணவுபொருட்கள் மூச்சுக்குழாய்க்குள் சென்று சிக்கிகொள்கிறது. அத்துடன் நுரையீரலுக்குள்ளும் சென்று விடுகிறது.
மூச்சுக்குழாய் 2.5 செ.மீ. அளவே இருக்கும். ஒரு வயது குழந்தைக்கு ஒரு செ.மீ. அளவில்தான் இருக்கும். ஏதாவது பொருள் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டால், உயிரிழப்பு அபாயமும் உள்ளது.
இதற்கு பி.எஸ்.ஜி மருத்துவமனையில் நவீன மருத்துவ சிகிச்சைகள் உள்ளன. 65 வயது மூதாட்டியின் நுரையீரலுக்குள் சிக்கிய மூக்குத்தி, கோழி இறைச்சி எலும்பு அகற்றி காப்பாற்றப்பட்டார். மேலும் குழந்தைகளின் காதுகள், மூக்கு, மூச்சுக்குழாய்க்குள் சிக்கிய பொருட்கள் அகற்றி மீட்கப்பட்டனர்.
பொம்மை பேட்டரிகளில் லித்தியம் உள்ளது. இது சிக்கினால் அமிலம் மூலம் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். இதற்கு உடனடி சிகிச்சை அவசியம். இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்ட 50க்கும் மேற்பட்டோர் இதுவரை சிகிச்சை பெற்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
