கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் 4வது தமிழ்நாடு தேசிய மாணவர்ப் படையின்  மாணவி அனுஸ்ரீ, தேசிய மாணவர்ப் படையின் எட்டு முகாம்களில் 80 நாட்கள் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு தமிழ்நாடு இயக்குநரகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபர் இயக்குநரகம் சார்பில் டெல்லியில் 12 நாட்கள் நடைபெற்ற அனைத்திந்திய தள் சைனிக் கேன்டோன்மெண்ட் எனும் 9வது முகாமில் ஆரோக்கிய மற்றும் சுகாதாரப் பிரிவில் கலந்துகொண்டார். தமிழகத்திலிருந்து பங்கேற்ற அனைத்து அணியினரையும் சேர்த்து கோவை குழுவில் தங்கப்பதக்கம் வென்ற ஒரே கேடட் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவர் கோவை குழுவிற்குத் தலைமையேற்று, மாநில அளவிலான இன்டர்குழு போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றவர். இளம் சாதனையாளராக இந்திய அளவில் சாதனை படைத்திருக்கும் மாணவியை கே.பி.ஆர் கல்விக் குழுமங்களின் தலைவர் ராமசாமி வாழ்த்தினார்.

கல்லூரிச் செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் கீதா, தேசிய மாணவர் படையின் அதிகாரி லெப்டினன்ட் ஸ்ரீதர், கல்லூரியின் புலமுதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.