இப்போதெல்லாம் திரைப்படங்களுக்குப் போகவே மிகவும் பயமாக இருக்கின்றது. ஸ்லோமோஷனில்  நாயகன் அறிமுகம், காதை கிழிக்கும் டால்பி இசை, சகட்டுமேனிக்குச் சுட்டுத்தள்ளும் அகோரமான சண்டைக் காட்சிகள், கன்னா பின்னாவென்று ஆங்கிலமும், அரபியும் இன்ன பிற மொழிகளும் கலந்த அர்த்தமே இல்லாத பாடல்கள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், தொண்டை கிழிய திரையிலும், காணவந்தவர்களது அரங்கு கூச்சல்களும், அரைகுறை ஆடையில் ஆயிரம் பேரோடு எதற்கென்றே தெரியாமல் இடுப்பைக் கை, கால்களை  வக்காரித்துக் கொண்டு ஆடும் ஆட்டங்களும், அந்த யுனிவர்ஸ், இந்த யுனிவர்ஸ் என்று கோடிகளில் அளந்து விடும் ஆணவமும் சேர்ந்து நமக்கு அமேசான், நெட்பிளிக்ஸே கதியென்று ஆகிவிட்டது.

தமிழ் மட்டுமல்ல, எல்லா மொழிகளிலும் மலையாளம் உட்பட ஏகப்பட்ட பில்ட் அப்புகளோடு வரும் படங்கள் வந்தவேதத்தில் காணாமல் போக, அரைவேக்காட்டு இயக்குனர்கள் அரசியலில் சொதப்ப, அத்தி பூத்தாற்போல ஒரு கன்னடப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு, பிரதமர் மோடி உட்பட அனைவராலும் பாராட்டப்பட்ட பின், நான் நம்ம ஊர் ஐமேக்ஸில் கண்டு களித்தேன்

ஆங்கிலப் படங்களில் கற்பனைக் கெட்டாத மார்வெல் காமிக்ஸ், ஹாரிபாட்டர் படங்களை ஆஹா ஓஹோவென்று கொண்டாடுவார்கள். ஆனால் நம்ம ஊர் விட்டலாச்சாரியா மற்றும் புராண படங்களைப்  பகுத்தறிந்து ஆராய்ந்து மட்டம் தட்டுவார்கள். மேல்தட்டு ரசனையாம்.

எல்லாவற்றையும் பாகுபலி மாற்றியது. ராஜமௌலியின் ஆர்.ஆர். ஆர் மாற்றியது. அந்த வரிசையில் இந்த காந்தாரா படம் ஒரு ரோமாஞ்சலியை ஏற்படுத்தி அசத்தியுள்ளது. பெரிய எதிர்பார்ப்பில்லாமல் சென்று பார்த்தேன். படம் முடிந்தபின் ரிஷப் செட்டியின் கதை, வசனம், இயக்கம், நடிப்பில் மெய்மறந்து போனேன்.

2022-ல் வெளிவந்த காந்தாரா படத்தின் முன்பகுதிக் கதை இது. சரித்திரம், சமத்துவம், இயற்கைச்  சூழல், ஆன்மிகம், தெய்வ நம்பிக்கை, நாட்டார் கோவில் வழிபாடு, குலதெய்வ நம்பிக்கை, ஆள்பவர்களின் பேராசை, அக்கிரமம், இறுதியில் நல்லதே வெல்லும் என்ற பாடம் காலத்திற்கேற்ப கதையில் ‘ட்டுவிஸ்ட்’கள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸின் பிரமிக்கவைக்கும் காட்சி அமைப்புகள், போர்க்காட்சிகள் என மிரட்டி இருக்கிறார்கள்.

துளு மொழி பேசும் மக்களது வழிபாட்டு முறையும், அதுசார்ந்த காட்சி அமைப்புகளும் வியக்கவைக்கின்றன. அரசன் அடிமைகளை வைத்து தான் கட்டிய கோவிலின் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து குடமுழுக்குக் கொண்டாடும் காட்சிகள், அதன் பின்னணியில் ஒலிக்கும் நாதசுர இசை – அடேங்கப்பா!அற்புதம் !

சண்டைக் காட்சிகள், இருண்ட காடுகளில் தீப்பற்றி ஊர் எரியும் காட்சிகள், தறிகெட்டுக் கடைவீதியில் ஓடும் ரதம் மற்றும் கட்டவிழ்ந்த வெண்புரவியின் பாய்ச்சல், நந்திபகவானோடு நாயகன் மோதும் விட்டலாச்சாரியா காலக் கற்பனை எல்லாம் கலந்து கட்டி நம்மை மூன்று மணிநேரம் புது உலகத்துக்கே அழைத்துச் செல்கின்றது.

ஜென் – இசட் இளையதலைமுறையும், திரைப்பட ரசிகர்களும் நமது பாரத நாட்டின் குலதெய்வம், பெருந்தெய்வம், இயற்கை வழிபாடு ஆகியவற்றை இப்படிக்கூடத் திரைவடிவில் கொடுக்கமுடியுமா என்று வாய்பிளந்து, மெய்சிலிர்த்துக் கரம்கொட்டிப் பார்ப்பதை நான் பார்த்தேன்.

மாயாபஜார், திருவிளையாடல், ஆயிரத்தில் ஒருவன், பாதாளபைரவி, பாகுபலி வரிசையில் சோர்ந்துகிடந்த மல்ட்டிஃப்ளக்ஸ் திரை அரங்குகளுக்கு வசூலில் மட்டுமின்றி வியப்பூட்டும் திரையனுபவத்தை அளித்திருக்கும் இந்தப்படத்தைக் குடும்பத்தோடும், நண்பர்களோடும் சென்று அனுபவித்து மகிழுங்கள்.

மண்சார்ந்த மாயாஜாலங்கள், மொழி, இனம் கடந்த கதைக்களம், எல்லாவற்றையும் விட தெய்வீகம் என்னும் உயர்ந்த பகுத்தறிவின் உச்சம் – காந்தாரா.

  • இயகோகா சுப்பிரமணியம்