கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமான பல லட்சம் டன் குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் மலைபோல குவிந்துள்ளன. அங்கு இவ்வாறு சேர்ந்துள்ள குப்பைகளால் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது.
இதனால் அதன் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள சில பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் இல்ல தேவைகளுக்காக போர் (ஆழ்துளை) மூலம் பெற்றுவரும் நீர் மஞ்சள் நிறத்தில் மாறியுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். இது வழக்கமாக நடைபெறும் ஒரு சம்பவமாக அங்குள்ளது.
இந்த நிலையில் இன்று இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு நீர் மிகவும் மஞ்சள் நிறத்திலும் நுரைபோலவும் அவர்கள் அமைத்த ஆழ்துளையில் இருந்து வந்துள்ளது.
இதுபற்றி சமூக செயற்பாட்டாளர் கே.எஸ்.மோகன்-னிடம் கேட்டபோது அவர் கூறியதாவது :-
மாநகராட்சி தரப்பில் கொடுக்கப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லை என்பதால் மக்கள் ஆழ்துளை போட்டு நீரை பயன்படுத்திவருகின்றனர். இன்று இதற்கு முன்பு பார்த்திடாத அளவுக்கு மஞ்சள் நிறத்தில் போர் நீர் குழாயில் நுரையுடன் வெளிவந்தது. இதுபற்றிய தகவல் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு பகிரப்பட்டுள்ளது.
மஞ்சள் நிறத்தில் நீர் வருவது அடிக்கடி நடக்கும் ஒன்றாக உள்ளது. இதுபோன்ற தாக்கம் மகாலிங்கபுரம், கோணவாய்க்கான்பாளையம், ஸ்ரீ ராம் நகர் (ஒரு பகுதி) இருக்கிறது. 1 ஆண்டுக்கு முன்பு இதேபோல சம்பவம் நடைபெற்றது நாளிதழ்களில் செய்தியானது. இந்த நிலையில் மீண்டும் கடும் மஞ்சள் நிறத்தில் நீர் வருவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
மாநகராட்சியிடம் பெறக்கூடிய நீர் போதுமானதாக இல்லாததாலும், போர் மூலம் கிடைக்கும் நீரும் இப்படி இருப்பதால், மக்கள் பலரும் காசு கொடுத்து வெளியே லாரி மூலம் நீரை வாங்குகின்றனர்.
மாநகராட்சி தரப்பில் இந்த பாதிப்பை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.
