கோவை ஈஷா யோக மையத்தில், சத்குரு குருகுலம் சார்பில் இந்தியப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கான ‘பாரம்பரிய ஹத யோகா ஆசிரியர் பயிற்சி’ நிகழ்ச்சி இன்று நிறைவு பெற்றது.

ஈஷாவில் கடந்த மார்ச் 23 முதல் ஏப்ரல் 6 வரை, 15 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இந்திய கடற்படையைச் சேர்ந்த 78 வீரர்களும் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 21 வீரர்களும் என மொத்தம் 99 பாதுகாப்புப் படை வீரர்கள் பங்கேற்றனர்.

நம் தேசத்தைப் பாதுகாப்பதற்காகத், தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் துணியும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பாரம்பரிய ஹத யோகப் பயிற்சிகள் முறையாகக் கிடைக்க வேண்டும் என்ற சத்குருவின் தொலைநோக்குப் பார்வையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற வீரர்களுக்கு உப-யோகா, சூர்ய கிரியா, அங்கமர்தனா மற்றும் ‘இன்னர் இன்ஜினியரிங்’ போன்ற யோகப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

ISHA 2 scaled

ஈஷாவில் ஹத யோகா ஆசிரியர் பயிற்சி பெற்ற வீரர்கள், அவர்களின் பாதுகாப்புப் படை தளங்களில் இருக்கும் மற்ற வீரர்களுக்கு இந்தப் பயிற்சிகளைக் கொண்டு செல்வர். ஈஷாவில் இதுவரை 700-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இந்த ஹத யோகப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய கடற்படை கேப்டன் ஸ்ரீகாந்த் ஜோஷி கூறுகையில், இந்த ஹத யோகா ஆசிரியர் பயிற்சி, உடல் உறுதி, மன அமைதி மற்றும் நம் உள்நிலை குறித்த ஆய்வு ஆகிய மூன்று முக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஒருவர் தனக்குள் சலனமற்ற நிலையை வளர்த்துக் கொள்ளும்போது, சுற்றியிருக்கும் சூழல்கள் குறித்த விழிப்புணர்வு அவருக்குள் மேம்படுகிறது. இது அதிக அழுத்தமான நேரங்களில் நிதானத்தைக் கடைபிடிக்கவும், சவாலான சூழல்களில் திறம்படச் செயல்படவும் உதவுகிறது.

இந்த ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சியானது, தங்கள் பிரிவுகளில் உள்ள ஏராளமான வீரர்களுக்கு யோகப் பயிற்சிகளை கொண்டு செல்ல வழிவகுத்துள்ளது. இது ஒட்டுமொத்தப் பாதுகாப்புப் படை சமூகத்திலும் பரவலான தாக்கத்தை உருவாக்குவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறினார்.