கோவை பெரியார் அறிவுலக நூலகத்துக்கு நூல்கள் தேர்வு செய்து கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இவ்விவகாரத்தில் உண்மைகள் முழுமையாக வெளிக்கொணரப்பட வேண்டும் என உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நூல்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றிருந்தவர்களின் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். உண்மைத்தன்மையும், நம்பகமான தரவுகளும் இல்லாமல் அச்சிடப்பட்ட நூல்களைப் பரிந்துரைத்தவர்களின் விவரங்களையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும்.
இவ்விவகாரம் குறித்து நடுநிலையான, நேர்மையான பணிநிறைவு பெற்ற நீதிபதி தலைமையில், தகுதியும் அனுபவமும் கொண்ட கல்வியாளர்கள் இடம்பெறும் விசாரணைக்குழு அமைக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் குறுகிய காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட வேண்டும்.

போலியான நூல்களைப் பரிந்துரைத்தவர்கள், கொள்முதல் செய்தவர்கள், அதற்கு ஆணையிட்டவர்கள் எனப் பொறுப்புடைய அனைவரையும் கண்டறிந்து, உரிய அமைப்புகள் மூலம் அதிகபட்சத் தண்டனை பெற்றுத்தர வேண்டும். எழுத்துத் திருட்டில் ஈடுபட்ட பதிப்பகங்களின் பட்டியலை வெளியிட்டு, அவற்றின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்காலத்தில் நூல்கள் தேர்வு செய்வதற்குப் புதிய வழிமுறைகளை வகுக்க வேண்டும். அதன்படி மூன்றடுக்கு தேர்வுக்குழு அமைக்கப்பட வேண்டும்.
முதல்குழு நூல்களை முழுமையாக வாசித்து, குறிப்புகளுடன் பரிந்துரைக்க வேண்டும். இரண்டாவது குழு அந்தப் பரிந்துரைகளை ஆய்வு செய்து, தகுதியான நூல்களை மட்டுமே அடுத்தகட்டத்துக்கு அனுப்ப வேண்டும். மூன்றாவது மேலாண்மைக் குழு பரிந்துரைகளைப் பரிசீலித்து இறுதிப் பட்டியலைத் தயாரிக்க வேண்டும்.
இக்குழுக்களில் பபாசி போன்ற அமைப்புகளின் பொறுப்பாளர்கள், நேர்மையான கல்வியாளர்கள், அனுபவமிக்க வாசகர்கள், திறனாய்வாளர்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினித்துறை வல்லுநர்கள் உள்ளிட்ட தகுதியானவர்கள் இடம்பெற வேண்டும். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நூல்கள் உருவாக்கப்படுவதையும், அதன் நம்பகத்தன்மையையும் கண்டறியும் தொழில்நுட்ப வல்லுநர்களும் இடம்பெற வேண்டும்.
நூல்களின் இறுதிப் பட்டியலைப் பொதுவெளியில் வெளியிட்டு, ஆட்சேபனைகள் தெரிவிக்க உரிய கால அவகாசம் வழங்கிய பின்னரே இறுதிசெய்ய வேண்டும்.
குற்றங்களை வெளிக்கொணர்வதோடு மட்டும் நின்றுவிடாமல், குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தருவதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதே உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கத்தின் நிலைப்பாடு. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
