பொள்ளாச்சியில் உள்ள மிராக்கிள் இன்டக்ரேட்டட் ஹெல்த் சென்டரில், சர்வதேச புற்றுநோய் மருத்துவ மாநாடு இரண்டு நாட்கள் நடந்தது.
‘புற்றுநோய் சிகிச்சையை மறுவடிவமைத்தல்: கட்டி உயிரியல், வளர்சிதை மாற்றம், நோயெதிர்ப்பு மற்றும் முழுமையான உடல்நலம்’ என்ற தலைப்பில் நடந்த மாநாட்டில், இந்தியா, அமெரிக்கா, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.

முதல் நாள் நிகழ்ச்சியில், மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாணிக்கம் மகாலிங்கம், ஒருங்கிணைந்த மற்றும் துல்லிய புற்றுநோயியலின் எதிர்காலம் குறித்து சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை நெறிமுறைகளை வடிவமைத்தல், சுற்றுச்சூழல் நச்சுகள், கட்டிகளில் ஆக்சிஜன் குறைபாட்டின் தாக்கம், ஆஸ்டியோபதிக் மருத்துவ முறைகள், வெப்ப சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சையை இணைத்தல், குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களின் பங்கு உள்ளிட்ட தலைப்புகளில் நிபுணர்கள் உரையாற்றினர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், நோயெதிர்ப்பு மாற்றியமைத்தல், ஒளி உயிரியல் மாற்ற சிகிச்சை, கீமோதெரபியால் ஏற்படும் நச்சுத்தன்மையை நிர்வகிப்பதில் தாவர மற்றும் ஊட்டச்சத்து முறைகளின் பங்கு, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மருந்துகளைப் புதிய சிகிச்சை நோக்கங்களுக்குப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
மாநாட்டின் நிறைவாக, ஊட்டச்சத்து மற்றும் நியூட்ராசூட்டிகல்ஸ் தொடர்பான இலவச செயல்முறைப் பயிலரங்கம் நடந்தது. தொடர்ந்து, பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
