“பணம் சம்பாதிப்பது என்பது கஷ்டம் என நமக்கு இந்த உலகத்தால் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அது அப்படி கிடையாது, அதற்கு கொஞ்சம் நிதி அறிவும் துணிச்சலும் தேவை. அதை பெண்கள், குறிப்பாக இளம் பெண்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும்,” என இன்று கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி தின விழாவில் நடிகர் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் ஆரி அர்ஜுனன் பேசினார்.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையால் நடத்தப்படும் இக்கல்லூரி, இன்று அதன் 35வது கல்லூரி தின விழாவை கொண்டாடியது. அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ராம்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

நடிகர் ஆரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கல்லூரியின் முன்னாள் மாணவியும், அமெரிக்க நிறுவனமான ‘டிஸ்கவுண்ட் டயர்’ நிறுவனத்தில் தர உறுதி பிரிவு – ஐ.டி. துறை துணை மேலாளராக பனி புரியும் திவ்யா கனகராஜ் கவுரவ விருந்தினராகவும் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் சித்ரா ஆண்டறிக்கை வாசித்தார்.

நடிகர் ஆரி பேசுகையில், பெண் கல்விக்கு தமிழ்நாடு மிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது எனவும்,  இந்திய அளவில் பணி செல்லும் பெண்கள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் விளங்குகிறது எனவும் பெருமையாக கூறினார்.

SREW 2

பெண்கள் இன்று பெறக்கூடிய பட்டம் என்பதற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய போராட்டமும் இருந்துள்ளது. பெண் என்பவள் இதற்கு மட்டும்தான் பயன்படுவாள் என்ற நிலையை மாற்றி பெண் அனைத்தையும் சாதிக்க பயன்படுவாள் என்ற நிலையை தமிழ்நாடு ஏற்படுத்தியுள்ளது என கூறினார்.

இப்படி ஒரு காலகட்டத்தில், பெண்கள் பட்டத்து அறிவையும், அதற்கு தகுந்த வேலையும் பெறுவதைப்போல பொருளாதார அறிவையும் பெற வேண்டும். அதற்கு சில நல்ல கருத்துக்களை பேச்சாகவும் புத்தகம் வடிவிலும் படிப்பது உதவும் என்றார். உலக அளவில் பெரும் வெற்றிகண்ட முதலீட்டாளராக உள்ள வாரன் பஃபெட் போன்றவர்களின் புத்தகங்களை பெண்கள் படிக்கலாம் எனவும் பரிந்துரைத்தார்.

படித்து முடித்து வேலை கிடைத்த உடனே, பெண்கள் தங்கள் சம்பளத்தில் கொஞ்சம் போஸ்ட் ஆபீஸில் உள்ள தேசிய சேமிப்பு திட்டம் மூலமாக பணத்தை சேமிக்க துவங்க திட்டமிடவேண்டும். இளம் வயதில் இருந்தே மருத்துவ காப்பீடு கூட துவங்கி வைத்துக்கொள்வதும் பெண்கள் பிறரை நாடாமல் முன்னேற வழிவகுக்கும் என்றார்.

“உங்கள் கைக்குக் கிடைக்கக்கூடிய ஒரு நல்ல சம்பளத்தை மட்டுமே நம்பி நீங்கள் இருக்கக் கூடாது. உங்களுடைய பணம் உங்களுக்காக உழைக்கும் ஒன்றாக அதை மாற்றிக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்,” என்று கூறினார்.

“நீங்கள் எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பும், இது சாத்தியமாகுமா என சிறு ஆய்வு செய்யுங்கள். நீங்கள் எடுக்கும் எல்லா முடிவிற்கு முன்னும் ஒரு ஆய்வு இருந்தால் நல்லது,” என அவர் கூறினார்.

நன்கு படியுங்கள், நல்ல வேலையில் சேருங்கள், நல்ல சம்பாத்தியத்தை பெறுங்கள். அந்த சம்பாத்தியத்தை வைத்து அந்த பணம் உங்களுக்கு எப்படி உழைக்க வேண்டும் என்கின்ற அறிவை பெற்றுக் கொள்ளுங்கள்.

உதாரணத்திற்க்கு, ஒரு வீட்டை நீங்கள் வாங்க விரும்பும்போது அதற்கான காசை அப்படியே கொடுத்து வாங்கிவிட்டால் வீடு மட்டும் நமக்கு சொந்தமாகிறது. அதுவே அந்த பணத்தை வங்கியில் பிக்சட் டெபாசிட் கணக்கை துவங்கி (நிலையான வவைப்பு தொகை கணக்கு) அதில் வைப்பு செய்தால் நமக்கு ஆண்டுக்கு 6.5% வட்டி விகிதத்தில் மாதம் ஒரு நல்ல தொகை கிடைக்கும். பின்னர் இந்த பிக்சட் டெபாசிட் கணக்கை வைத்து 90% கடன் பெறலாம்.

இப்போது இதன் மூலம் நீங்கள் விரும்பிய வீட்டை வாங்கி, அதை சில காலம் வாடகைக்கு கொடுக்கும்போது, உங்களால் அந்த வாடகை பணத்தையும், உங்களின் ஒரு பங்கீட்டையும் வைத்து வங்கி கடனை திரும்ப செலுத்த முடியும். வங்கி கடன் காலம் நிறைவடையும் போது உங்கள் வீடும் உங்களிடம் இருக்கும், அந்த பிக்சட் டெபாசிட் கணக்கில் வைத்த மொத்த பணமும் உங்களிடம் இருக்கும்.

இதுபோன்ற நிதி அறிவையும் பொறுமையையும் கொண்டு செயல்பட்டால் மேலும் உயரத்தை தொடமுடியும் என அவர் கூறினார்.

கௌரவ விருந்தினர் திவ்யா கனகராஜ் பேசும்போது பெண்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் கல்லூரிக்குப் பெரும்பங்கு இருப்பதாகக் கூறி, மற்றவர்களோடு ஆக்கப்பூர்வமான நட்புறவு பேணுதல், நம் வெற்றிக்குத் துணைநிற்கும் உந்துசக்திகளை மதித்தல், நம்முடைய பலவிதத் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுதல் போன்ற பண்புகள் நம்மை மேம்படுத்த உதவும் என்றதோடு, வாய்ப்புகளைக் கண்டறிந்து பயன்படுத்திக் கொள்ளவும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ஸ்சி.வி.ராம்குமார் பேசுகையில் மாணவர்கள் தங்களின் கல்வித் தேடல்களுடன் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் வாழ்வில் சிறந்து விளங்கப் பாடுபடுவதோடு மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழவும் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்குப் பரிசுகளும் பெஸ்ட் அவுட்கோயிங் விருதுகளும் வழங்கப்பட்டன.