ராயல் கேர் மருத்துவமனை, சோமனூர் லயன்ஸ் கிளப் மற்றும் கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் சார்பில், விபத்தில் சிக்கியோரை எப்படி காப்பாற்றுவது, முதலுதவி சிகிச்சை எவ்வாறு அளிப்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை கருமத்தம்பட்டி நால் ரோட்டில் நடைபெற்றது.
அன்னுார் ரோட்டில் இருந்து, மாணவ, மாணவியருடன் வந்த பள்ளி வாகனம், கருமத்தம்பட்டி ரோட்டில் விபத்தில் சிக்கியது. மாணவர்கள் காயமடைந்து அலறுவதை கேட்டு பொதுமக்கள், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபடுவது போல் தத்ரூபமாக செயல் விளக்கம் அளித்தனர்.
மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வது குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது. காயமடைந்தவர்களை பக்குவமாக துாக்க வேண்டும். பதட்டத்தில் வேகமாக செயல்படாமல், நிதானத்தை கடைபிடித்து செயல்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு விபத்து முதலுதவி எண் 108 மற்றும் 1033 ஆகியவை எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதுபற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

ராயல் கேர் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் மணிசெந்தில்குமார், டாக்டர். சுதாகரன், தரக்கட்டுப்பாடு துணைத்தலைவர் டாக்டர் காந்தி ராஜ், காவல்துறை அதிகாரிகள் கருமத்தம்பட்டி தங்கராமன் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார், நெடுஞ்சாலைத்துறை டி.ஜி.எம் திட்ட இயக்குனர் செந்தில்குமார், சோமனூர் லைன்ஸ் கிளப் தலைவர் ரேவதி, செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் மயில்சாமி, ஆடிட்டர் முருகசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ராயல் கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் கூறும் பொழுது, அடிக்கடி ராயல் கேர் மருத்துவமனை நடத்தும் இது போன்ற மாதிரி ஒத்திகைகள், கருத்தரங்கு மற்றும் மருத்துவ முகாம்கள், சாலை விபத்துகளைத் தடுக்கவும் பாதுகாப்பான நடைமுறைகளை மேற்கொள்ளவும் மக்களுக்கு வழிகாட்டுகிறது என்று கூறினார்.
