இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா கலாம் ஆடிட்டோரியத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ஜெயா வரவேற்புரையாற்றி ஆண்டறிக்கையை வாசித்தார். தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் (ஓய்வு) விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 1,450 பட்டதாரிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

சிறப்புரையாற்றிய அவர், பட்டதாரிகளின் வெற்றிக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கு முக்கியமானது என பாராட்டினார். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற புறநானூறு வரியை மேற்கோளிட்டு, புதிய தொழில்நுட்பங்களை மட்டும் நம்பாமல் அடிப்படை அறிவை மேம்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும், வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளுதல், மாற்றங்களுக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்வது, வேலைவாய்ப்பு வாய்ப்புகளை தேடுதல், சமூக ஈடுபாடு போன்ற நான்கு முக்கிய வழிமுறைகளைப் பட்டதாரிகள் கடைப்பிடிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

சென்னை இந்திய தொழில்நுட்ப மையத்தின் மூத்த இயக்குநர் வைஜெயந்தி ஸ்ரீனிவாசராகவன் இண்டஸ்ட்ரி தேவைகளுக்கேற்ப புதிய தீர்வுகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார். நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்னையன் மற்றும் இணைச் செயலர் பிரியா, யமுனா சக்திவேல் பட்டதாரிகளை வாழ்த்தினர்.

விழாவில் துறைவாரியாக முதலிடம் பெற்ற 25 பட்டதாரிகள் கேடயத்துடன் இரண்டரலட்ச ரூபாய் ரொக்கப் பரிசு பெறினர். மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.