கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் உடற் கல்வியியல் துறை சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் 18-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் பொன்னுச்சாமி வாழ்த்துரை வழங்கினார். ஆங்கிலத் துறைப் பேராசிரியர் பிரியா சரன் தாமஸ் மாணவர்களை வாழ்த்தினார். மேலும், கோவை பாரதியார் பல்கலைக் கழக உடற் கல்வியியல் துறைப் பேராசிரியர் அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி அறிவுடன் விளையாட்டுத் திறனும் அவசியம் வேண்டும் என்று கூறி நிகழ்வினைத் துவக்கி வைத்தார்.

போட்டியில் முதலிடத்தை கற்பகம் கல்லூரியும், இரண்டாம் இடத்தை டாக்டர் என். ஜி. பி கலை அறிவியல் கல்லூரியும், மூன்றாம் இடத்தை வி. ஐ.டி வேலூர் அணியும், நான்காம் இடத்தைப் பாரதியார் பல்கலைக் கழக அணியினரும் பெற்றனர்.

இதைத்தொடர்ந்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழல் கோப்பைகள், பதக்கங்கள் மற்றும்  சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறந்த ஆட்ட நாயகனாக என்.ஜி. பி. கல்லூரி மாணவர் ஜெகதீஷ் மற்றும்  கற்பகம் கல்லூரி மாணவர் சரண் குமார் தேர்வு செய்யப்பட்டனர்.

இறுதியாக, கணிப்பொறி அறிவியல் துறைத் தலைவர் ரங்கராஜன் , வணிகவியல் துறைத் தலைவர் லோகநாதன் ஆகியோர் நன்றியுரை வழங்கினார்கள்.