கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மாணவி கீத்திகா அகில இந்திய பல்கலைக்கழக அளவில் நடைபெறும் யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
முன்னதாக, நேரு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பாரதியார் பல்கலைக்கழக அளவிலான யோகா போட்டியில் பெண்கள் பிரிவில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்திய கீத்திகாவை, பல்கலைக்கழக தேர்வுக்குழு உறுப்பினர்கள், தற்பொழுது புவனேஸ்வரில் உள்ள கலிங்கா இன்ஸ்டியூட் ஆப் சோசியல் சயின்ஸ் கல்லூரியில் அகில இந்திய அளவில் நடைபெற உள்ள யோகா போட்டிக்கு பாரதியார் பல்கலைக்கழக அணி சார்பாக பங்கேற்க தேர்வு செய்துள்ளனர்.
கல்வி கட்டண சலுகை
இது குறித்து மேலும் கீத்திகா கூறுகையில் “நான் 12ம் வகுப்பில் கடந்த ஆண்டு முடித்து எத்தனையோ கல்லூரிகளில் நான் யோகாவில் வெற்றி பெற்ற சான்றிதழ்களைக் கொடுத்து விளையாட்டு பிரிவில் படிப்பதற்காக இடம் கேட்டிருந்தேன். படிப்பதற்காக மற்ற கல்லூரிகளில் எங்கும் விளையாட்டுப் பிரிவில் யோகாவிற்கு ஸ்போர்ட்ஸ் கோட்டா கல்வி கட்டண சலுகை வழங்கவில்லை. ஆனால் எனது திறமையையும் எனது பள்ளி பருவத்தின் சாதனைகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் சரஸ்வதி, நிர்வாக செயலாளர் பிரியா ஆகியோர் எனக்கு B.Sc(IT) துறையில் விளையாட்டு பிரிவில் இடம் கொடுத்து கல்விக்கட்டண சலுகைகளை அனைத்தையும் வழங்கி, படிப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். அவர்களுடைய நம்பிக்கையை நான் எப்பொழுதும் காப்பாற்றுவேன் என்றும், யோகாவில் பல்வேறு சாதனைகளை இந்துஸ்தான் கல்லூரிக்கு செய்து கொடுப்பேன் என்றும் இந்த நேரத்தில் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்” என்று கூறினார்.