கோவையில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, 2ம் நாளான இன்று தொழில்துறையினருடன் கலந்துரையாடலில் பங்கேற்றார்.
தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவையில் நேற்று தொடங்கினார். முதல் நாள், மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் தேக்கம்பட்டியில் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து ரோடு ஷோ, பிரச்சார வாகனத்தில் நின்றவாறு பொதுமக்களிடையே பேசினார்.
2ம் நாளான இன்று கோவை ரேஸ் கோர்சில் நடைபயிற்சியின் போது, மக்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர்கள் கூட்டமைப்பு, சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர்கள், விமான நிலையம் விரிவாக்க நிலம் கொடுத்தவர்கள், தங்க நகை தொழிலாளர் சங்கம், மகளிர் சுய உதவி குழுக்கள் பங்கேற்ற கலந்துரையாடலில் எடப்பாடி பழனிசாமி குறைகளை கேட்டறிந்தார். நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் கே.ஆர்.ஜெயராம், அம்மன் அர்ஜூனன் உடன் இருந்தனர்.
