சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், மியாவாக்கி முறை மரம் வளர்ப்பினை, வீ தி லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை மரக்கன்று நட்டுவைத்து தொடங்கிவைத்தார்.

நிகழ்வில் சகோதரன் அமைப்பின் தலைவர் இயா.கா.கோ.சுப்பிரமணியன், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், ‘வீ தி லீடர்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

குறுகிய இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்களை நட்டு வளர்க்கும் முறைதான் ‘மியாவாக்கி’. அவ்வகையில், 1008 மரக்கன்றுகளைச் சிறப்பு விருந்தினர்களும், பள்ளி மாணவ மாணவியரும், ஆசிரியர்களும், பணியாளர்களும் நட்டனர்.

சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் பேசுகையில்: சுற்றுச்சூழல் செழிக்க தேனீக்கள், வௌவால்கள், வண்ணத்துப்பூச்சிகள், பறவைகள் ஆகிய உயிரினங்கள் மிக முக்கியம். நகரத்துக் குழந்தைகள் கான்கிரீட் சுவர்களுக்குள் தொலைந்து போகும்போது, இயற்கை அன்னையின் மடியில் நீங்கள் கற்கும் இந்தக் கல்வி உங்கள் வாழ்வை நிச்சயம் மாற்றியமைக்கும் என்றார்.

சகோதரன் அமைப்பின் தலைவர் இய.கா.கோ சுப்பிரமணியம் பேசுகையில்: நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என ஐம்பூதங்கள் இருந்தாலும், மனிதகுலத்திற்கு வாழும் வழியைக் கற்றுக்கொடுக்கும் உன்னத உதாரணம் மரம்தான் என்று பேசினார்.

வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பேசுகையில்: நாம் நட்டுள்ள இந்த 1008 மரங்கள் 1 ஆண்டில் சுமார் 3.8 மெட்ரிக் டன் கார்பனையும், 20 ஆண்டுகளில் 315 மெட்ரிக் டன் கார்பனையும் உறிஞ்சும். ஆனால், ஒரு கனரக லாரி ஓர் ஆண்டுக்கு வெளியிடும் கார்பன் மட்டுமே 30 மெட்ரிக் டன். நாம் 20 ஆண்டுகள் பராமரிக்கும் மரம் வெறும் 10 லாரிகளின் புகையைத்தான் சமன் செய்யும்.

ஒரே நாளில் உத்தரப் பிரதேசம் 6.66 கோடி மரங்களையும், எத்தியோப்பியா 35 கோடி மரங்களையும் நட்டு சாதனை படைத்துள்ளது. எத்தியோப்பியா இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே 81 கோடி மரங்களை நட்டுள்ளது. வறுமையில் உள்ள ஒரு நாடே இவ்வளவு பெரிய அளவில் யோசிக்கும்போது, நாமும் லட்சங்களிலும் கோடிகளிலும் மரங்களை நடும் பெரும் சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டும் என்று பேசினார்.

11. sachidanandha scaled

நிகழ்வில் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி, பள்ளிச் செயலர் கவிதாசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், கல்விப்புல முதன்மையர் ஷீலா கிரேஸ், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.