‘அரசியல்’ என்பது இல்லாத இடமில்லை, அது டீ-கடை பெஞ்சில் துவங்கி நண்பர்கள், அலுவலகம், சமூகம், குடும்பம் என காற்று போல எங்கும் இருக்கும் என்பதற்கு தற்போது நடைபெற்ற ஒரு சம்பவம் சிறந்த உதாரணமாக உள்ளது.
ராணிப்பேட்டையில் திமுக சார்பில் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்திக்கு சீட் வழங்கப்பட்டிருந்த நிலையில், அதனால் அதிருப்தி அடைந்த அமைச்சர், தனக்கு தான் சீட் வழங்கவேண்டும் என விடாப்பிடியாக இருந்தார்.
தனக்கு சீட் இல்லாமல் மகனுக்கு சீட் கொடுத்ததால் தேர்தல் பணிகளை செய்யவேண்டாம் என காந்தி அப்பகுதிக்கு திமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாக வெளிவந்த செய்திகள் அக்கட்சியினரிடம் மட்டுமல்ல அப்பகுதி வாக்காளர்களிடமும் விமர்சனம் பெற்றது.
இந்த நிலையில், நேற்று மாலை தன்னை கட்சி தலைமை வேட்பாளராக அறிவித்துவிட்டதாக செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் காந்தி அதன்படியே இன்று மதியம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
80 வயதான அமைச்சர் காந்தி, தனது சொந்த மகனுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கட்சி வாய்ப்பு வழங்கியும் தனக்கு தான் அந்த வாய்ப்பு வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்ததும், அதை அவர் மகன் விட்டுக்கொடுத்ததும், புதுவகை குடும்ப அரசியலா என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
