இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் டன் பிளாஸ்டிக் பேனா கழிவுகள் உற்பத்தியாகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?

டிஜிட்டல் யுகத்தை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வந்தாலும், பிளாஸ்டிக் பேனாக்களின் பயன்பாடு இன்னும் குறையவில்லை. மலிவு விலை மற்றும் எளிதில் கிடைக்கும் தன்மை காரணமாக, ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பிளாஸ்டிக் பேனாக்கள் பயன்படுத்தப்பட்டு குப்பையாக மாறுகின்றன. இதனால் நிலம், நீர் மற்றும் மனித உடல்நலம் வரை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 450 கோடி பிளாஸ்டிக் பேனாக்கள் பயன்படுத்தப்பட்ட பிறகு தூக்கி எறியப்படுகின்றன. இதன் விளைவாக, 1.80 லட்சம் டன் அளவிலான மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. இந்தக் கழிவுகள் மண்ணிலும் நீர்நிலைகளிலும் நீண்ட காலம் தேங்கி, சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

நாட்டில் எழுதுபொருட்கள் சந்தையின் மதிப்பு சுமார் 8,000 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்படுகிறது. இதில் 70 சதவீத பங்கை பால் பாயிண்ட் பிளாஸ்டிக் பேனாக்கள் வகிக்கின்றன. குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் இத்தகைய பேனாக்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. 10 ரூபாய் விலையில் கிடைப்பதால், அவை நம் கைகளில் புழக்கத்தில் உள்ளன.

சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பேனாக்களில் உள்ள காட்மியம் போன்ற நச்சு உலோகங்கள் மண்ணிலும் நீரிலும் கலக்கின்றன. இவை மண்ணின் வேதியியல் தன்மையை மாற்றுவதுடன், விவசாய உற்பத்தியையும் பாதிக்கும். மேலும், உணவு மற்றும் குடிநீர் வழியாக மனித உடலுக்குள் நுழையும் இந்த நச்சுப் பொருட்கள், நீண்டகால உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்படுகிறது.

இந்தப் பிரச்சினைக்கு மாற்று முயற்சியாக, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரீபென் இந்தியா அமைப்பு, பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பேனாக்களை கல்வி நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து சேகரித்து மறுசுழற்சி செய்து வருகிறது. பயன்படுத்தப்பட்ட பேனாக்களை மறுசுழற்சிக்காக ஒப்படைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க முடியும் என அந்த அமைப்பு வலியுறுத்துகிறது.

அதேநேரத்தில், மூங்கில், காகிதம் மற்றும் மரத்தால் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேனாக்களைப் பயன்படுத்தலாம் என அறிவுறுத்துகின்றனர்.

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஜியோ டாமின் கூறுகையில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பொருட்களைத் தவிர்த்து, நீண்டகாலம் பயன்படுத்தக்கூடிய பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பிளாஸ்டிக் பிரச்சினை என்பது அது மக்கும் அல்லது மக்காத பொருள் என்பதைக் கடந்த ஒன்று. அதன் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள், கார்பன் உமிழ்வு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்களும் தங்களின் தயாரிப்புகளுக்குப் பொறுப்பேற்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.