கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், ‘ஐந்திணை 26’ என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் செயலாளர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அகிலா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்து கொண்டு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் மேம்பாடு, நிலையான வாழ்க்கை முறை மற்றும் பூமியைப் பாதுகாப்பதில் இளைய தலைமுறையினரின் பங்கு குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தனர்.
சிறப்பு சொற்பொழிவு அமர்வில், ஓசை காளிதாசன், ‘இயற்கையும் உயிரினங்களும்’ என்ற தலைப்பில் பேசினார். மாரிமுத்து யோகநாதன், ‘வனம் – நம் வரம்’ என்ற தலைப்பில், வனங்களின் முக்கியத்துவம், மரங்களைப் பாதுகாத்தல் மற்றும் இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.
கந்தசாமி சதாசிவம், ‘இயற்கையும் பறவைகளும்’ என்ற தலைப்பில், சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதில் பறவைகளின் பங்கு மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும், தமிழ்மாறன், ‘மண் வளம் – வாழ்வின் வளம்’ என்ற தலைப்பில் மண் வளத்தைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினார். ஆர். மணிகண்டன், ‘நீர்வளம் – நாளைய நல்வளம்’ என்ற தலைப்பில் நீர்வளப் பாதுகாப்பு, நீர் சேமிப்பு மற்றும் எதிர்கால தலைமுறைக்கான நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
பாலகுமாரன், ‘நெகிழியில்லா உலகம் – தூய்மையான எதிர்காலம்’ என்ற தலைப்பில், நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்தல், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துதல் குறித்து பேசினார்.
