டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் உலக தொழில் முனைவோர் தினத்தை முன்னிட்டு, இளங்கலை மேலாண்மையியல் துறை சார்பாக தொழில் முனைவோர் தினவிழா நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் சரவணன் பேசுகையில்: தொழில் முனைவோர் இல்லாமல் இவ்வுலகம் இயங்காது. இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் பணம் இல்லாமல் தொழில் தொடங்க முடியாது. 2000-ஆம் ஆண்டிற்குப் பின்பு இந்த நிலை மாறிவிட்டது. தமிழகத்தில் சிறந்த தொழில் முனைவோராக மாறுவதற்கு ஏராளமான தொழில் வாய்ப்புகளும், நிதி நல்கைகளும் இருக்கின்றன என்றார்.
என்.ஜி.பி.கல்விக்குழுமங்களின் கல்விசார் இயக்குநர் முத்துசாமி பேசுகையில்: இவ்வுலகில் தொழில் முனைவோராக நிறைய வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி பெறுதல் அவசியம். விழிப்புணர்வு தொழில் முனைவோருக்கு இருக்க வேண்டும். சாதாரண மனிதர்கள் மிகப் பெரிய ஆளுமைகளாக மாறிவிடுகின்றனர் என்றார்.
சிறப்பு விருந்தினராக அனன்யா குரூப் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் உமாமகேஸ்வரி யுவராஜ் கலந்து கொண்டு கூறுகையில்: இளம் தலைமுறையினர் சமூகத்தில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தொழில் முனைவோராக மாற வேண்டும்.
2009 ஆம் ஆண்டு முதியோர் வசிக்கும் இல்லங்களைச் சென்று பார்வையிட்ட பொழுது, அங்கு தங்கும் வசதிகள் குறைவாக இருப்பதைக் கண்டேன். தாம் உருவாக்கும் இல்லங்களில் முதியோர் வசிப்பதற்கு ஏற்ப அனைத்து வசதிகளையும் திறம்படச் செய்ய வேண்டும் என்று உறுதி செய்து கொண்டேன். தங்களுடைய முதல் திட்டத்தில் நவீன உட்கட்டமைப்பு வசதி, ஜிம், யோகா, நீச்சல் குளம் போன்ற வசதிகளை ஏற்படுத்தி நானா நானியை உருவாக்கினோம் என்றார்.
தொழிலில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். விடா முயற்சி, பொறுமை, கடின உழைப்பு, நேர மேலாண்மையை முழுமையாகப் பயன்படுத்தினால் வெற்றி பெற முடியும் என்றார்.
