இந்திய ஐ.டி. துறையில் டி.சி.எஸ். எனும் பெயரை தெரியாத பணியாளர்களே இருக்கமுடியாது. கணினி அறிவியல் கற்கும் பலருக்கும் தாங்கள் எதிர்காலத்தில் டி.சி.எஸ்., இன்போசிஸ், ஹேச்.சி.எல். போன்ற முன்னணி நிறுவனங்களில் பணிபுரிய தான் ஆசை இருக்கும்.
இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவன வரிசையில் டி.சி.எஸ். உள்ளது. ஆனால் சமீபத்தில் அந்த நிறுவனம் செய்த செயல் ஒன்று தான் இப்போது ஐ.டி. துறை பணியாளர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பி உள்ளது.
டி.சி.எஸ். நிறுவனம் தனது பணியாளர்களுக்கு மடிக்கணினிகளை வழங்குவது வழக்கம். தற்போது அதில் ஒரு புதிய மென்பொருள் ஒன்றை பணியாளர்களுக்கே சொல்லாமல் அதில் இணைத்துள்ளது அந்த நிறுவனம்.
இதில் என்ன பிரச்சனை இருக்கிறது?
டிஜிட்டல் அனுபவ கண்காணிப்பு அமைப்பு என சொல்லப்படும் (Digital User Experience Monitoring Tool) மென்பொருள் ஒன்றை அந்த நிறுவனம் பணியாளர்களுக்கு தான் கொடுத்த மடிக்கணினியில் முன்னறிவிப்பின்றி சேர்த்துள்ளது. இதை கொண்டு ஒரு பணியாளர் அந்த மடிக்கணினியில் எந்த செயலியை பயன்படுத்தினார், எவ்வளவு நேரம் பயன்படுத்தினார் என்பதை அறிய முடியும். அதேநேரம் இதை கொண்டு அந்த பணியாளரை கண்காணிக்கவும் முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
இந்த அமைப்பை உருவாக்கியது யார்? அந்த மென்பொருளின் தன்மை என்ன, எப்படிப்பட்ட தகவல்கள் அந்த மடிக்கணினியில் இருந்து எடுக்கப்படுகிறது? நிறுவனத்தில் உள்ள யாரெல்லாம் இந்த தகவலை பார்க்க முடியும் என்பது பற்றிய விவரங்கள் வெளிப்படையாக விளக்கப்படாமல் இருப்பது டி.சி.எஸ். நிறுவன பணியாளர்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் வளர்ந்துவரும் ஏ.ஐ.யுகத்தில் டி.சி.எஸ். போன்ற மென்பொருள் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் தரவுகளை பாதுகாப்பாக வைக்கவேண்டியது மிக மிக அவசியமானதாக மாறும்போது இப்படி ஒரு செயலை செய்யவேண்டியது கட்டாயமாகிறது எனவும், இதை செய்வதால் தரவுகள் கசிவது தவிர்க்கப்படும் எனவும் கூறுகின்றனர் நிபுணர்கள்.
நீங்கள் சொல்லுங்கள்… உங்கள் நிறுவனத்தில் இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதை ஏற்பீர்களா?
