கோவை பெரியதடாகம் அருகே உள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளில், காட்டு யானை ஒன்று பிளாஸ்டிக் கவர்களை உண்பது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனைகட்டி, தடாகம் மற்றும் மாங்கரை வனப்பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள நிலையில், அனுவாவி கோவிலுக்கு வரும் பக்தர்கள் வீசிச் செல்லும் பிளாஸ்டிக் குப்பைகள் யானைகளுக்கு ஆபத்தாக மாறி வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் கோவில் அடிவாரத்தில் குப்பைகளைக் கிளறி உணவு தேடிய பெண் காட்டு யானை, பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் உணவுக் கழிவுகளைச் சாப்பிட்டுள்ளது. இதனைப் பார்த்த பக்தர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

6b 5 scaled

காட்டு யானை உணவுக் கழிவுகளைத் தின்னும் காணொளி வெளியானதைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம் வெள்ளிக்கிழமை அன்று குப்பைகளை அகற்றியது.

ஏற்கனவே மருதமலை வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்ட கர்ப்பிணி யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அனுவாவி கோவில் அருகே மற்றொரு யானை பிளாஸ்டிக் குப்பைகளை உண்பது வன உயிரின ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வனப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அலட்சியமாகச் செயல்படுவோர் மீது வனத்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.