தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் கம்பங்கள் நடுவது, கேபிள்கள் அமைப்பது, மின் பாதைகளை பராமரிப்பது மற்றும் கள அளவிலான கடினமான உழைப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்கள் கேங்மேன் என்றழைக்கப்படுவர்.
இவர்களில் கோவை வடக்கு வட்டத்திற்கு உட்பட்ட கேங்மேன் பணியாளர்கள் சிலர் பணியிடம் மாற்ற உத்தரவு/ ஊர் மாற்ற உத்தரவு (Transfer Order) பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு உத்தரவு பெற்றவர்கள், தங்களால் பணி விடுப்பு பெற முடியாத நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் இவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு – கோவை வடக்கு கிளை சார்பில் இன்று கோவை தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரப்பில், கேங்மேன் பணியாளர்கள் உரிய நிர்வாக வழிமுறைகளின்படி, 18-06-2026 அன்று ஊர் மாற்ற அடிப்படையில் பணி மாறுதல் உத்தரவை பெற்றுள்ளனர். இது தொடர்பாக கடந்த 13.07.2026 அன்று சிஐடியு – கோடீ அமைப்பின் சார்பில் நேரில் கடிதம் வழங்கி விரிவாகப் பேசப்பட்டது.

இருப்பினும், அக்கடிதத்தின் மீது இதுவரை எவ்வித நிர்வாக நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தொடர்ந்து காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களாக மேற்பார்வை பொறியாளரிடம் பணி விடுப்பு தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் ஊர் மாற்ற உத்தரவு பெற்ற அனைத்து கேங்மேன் பணியாளர்களுக்கு பணி விடுப்பு வழங்க தவறியதால், தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த போராட்டம் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டது.

