கோடைக்கால வெயிலை சமாளிக்க பலரும் சாப்பிட விரும்புவது தர்பூசணிப் பழமே. சுமார் 92 சதவீதம் நீர்ச்சத்து கொண்ட இந்தப் பழம் உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து தாகத்தை தணிக்க உதவுகிறது. ஆனால், தர்பூசணியை சாப்பிடும் போது சில உணவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்வது செரிமான சிக்கல்களை உருவாக்கக்கூடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

சில குறிப்பிட்ட உணவுகளுடன் தர்பூசணியை சேர்த்து சாப்பிட்டால் கடுமையான வயிற்று வலி, அஜீரணக் கோளாறுகள் ஏற்படும். அப்படி தர்பூசணியுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

அசைவ உணவுகளுக்குப் பிறகு

பிரியாணி, இறைச்சி போன்ற அசைவ உணவு சாப்பிட்ட பின்னர், சிலருக்கு டெசர்ட் போல தர்பூசணியை சாப்பிடும் பழக்கம் உள்ளது. ஆனால் இப்படி சாப்பிடுவது செரிமான மண்டலத்திற்கு ஆபத்தை தரும்.

காரணம், புரதச்சத்து, கொழுப்பு உணவுகள் செரிமானமாவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். தர்பூசணி வேகமாக செரிமானமாகி விடும். இந்த இரண்டு உணவுகளும் ஒரே நேரத்தில் வயிற்றில் சேர்ந்தால், செரிமான சுழற்சியில் குழப்பம் ஏற்பட்டு, வயிற்றில் சிரமத்தை உருவாக்கலாம்.

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்

தர்பூசணி சாப்பிட்ட உடனே பால் அல்லது பால் சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. தர்பூசணியில் வைட்டமின் சி மற்றும் லேசான சிட்ரிக் தன்மை உள்ளதால் சிலருக்கு இந்தக் கலவை வயிறு உப்பசம், நெஞ்செரிச்சலை உடனடியாக உருவாக்கிவிடும்.

பாலில் உள்ள புரதமும் தர்பூசணியின் தன்மையும் முற்றிலும் முரண்பட்டவை என்பதால் வாயுத்தொல்லை போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக, செரிமானம் சென்சிட்டிவாக உள்ளவர்களுக்கு இது அதிக பாதிப்பை தரலாம்.

தர்பூசணி சாப்பிட்ட உடனேயே தண்ணீர்

எந்த பழங்களை சாப்பிட்டாலும் பலருக்கும் உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். தர்பூசணியில் ஏற்கனவே அதிக அளவு நீர் உள்ளது. அதனால் அதை சாப்பிட்ட உடனே அதிகமாக தண்ணீர் குடிப்பது வயிற்றில் உள்ள செரிமான அமிலங்களை நீர்த்துப் போக செய்துவிடும். இதனால் செரிமானம் மிகவும் தாமதமாகி வயிற்றில் வலி மற்றும் அசௌகரியம் ஏற்படலாம். தர்பூசணி சாப்பிட்ட பிறகு குறைந்தது 20–30 நிமிட இடைவெளிக்குப் பிறகு தண்ணீர் குடிப்பது நல்லது.

சிறந்த நேரம்

தர்பூசணியை எப்போதுமே தனியாக சாப்பிட வேண்டும். இதனை மற்ற உணவு அல்லது பானத்தோடு கலந்து சாப்பிடக்கூடாது. காலையில் வெறும் வயிற்றில் அல்லது இரண்டு உணவுகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் சாப்பிடலாம்.