அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 07.05.2026 முதல் பதிவு செய்து வருகின்றனர்.
2026-2027 ம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,26,959 (Shift – I – 1,01,022/ Shift – II – 25,937) சேர்க்கை இடங்கள் உள்ளன. மாணாக்கர்கள் தாங்கள் விருப்பப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இதுவரை 224034 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
மாணாக்கர்களின் நலன் கருதி விண்ணப்ப பதிவு செய்ய தவறிய மாணாக்கர்களுக்காக இரண்டு நாட்கள் இடைவெளியில் www.tngasa.in இணைய தளம் வாயிலாக 01.06.2026 முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம். மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டுதல் தொடர்பாக விவரங்களை www.tngasa.in என்ற இணைய தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணாக்கர் சேர்க்கை தொடர்பான ஐயங்களுக்கு விளக்கம் பெற கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தைத் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 044 -24343106 / 24342911 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
