சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை மக்கள் சேவை மையம் தனியார் கல்லூரி சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், “நான் மூன்று விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன், ஒன்று தமிழக காவல்துறை, ஒரு சிறு சிறு பதிவுகள் சமூக ஊடகங்களில் வந்தாலே பாய்ந்து போய் இரவோடு, இரவாக கைது செய்வது என்பது இன்றல்ல தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருக்கிறது. இதில் கடந்த இரண்டு வருடங்களாக பா.ஜ.க வினர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இரண்டாவது, எதிர்க் கட்சிக்காரர்கள் மட்டுமல்ல பத்திரிகையாளர்கள் கூட அரசாங்கத்தை விமர்சனம் செய்தால் குண்டாஸ் போடும் அளவுக்கு இந்த அரசு இருக்கிறது. பா.ஜ.க வையும் தான் விமர்சிக்கிறார்கள் மோடியை விமர்சிக்காத ஊடகங்களே  கிடையாது. ஆனால் தமிழக அரசை பற்றி விமர்சித்தால் பத்திரிக்கையாளர்கள் கூட தப்புவதில்லை. அதே போல அண்ணா பல்கலைக் கழக மாணவி விஷயத்தில், அத்தனை எதிர்க் கட்சிகளும் போராடுவதற்கு அனுமதி கேட்ட பொழுது அவர்கள் அனைவரையும் கைது செய்து மிக மோசமான ஒரு இடத்தில் அடைத்து வைத்தார்கள். அதே போலத் தான் திருப்பரங்குன்றம் விஷயத்தில் நீதிமன்றம் சென்று ஆணை பெற்று ஒரு போராட்டம் நடத்தக் கூடிய சூழலில் தான் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கிறது. ஒருபுறம் அன்றாடம் கொலை கொள்ளை, அதே போல தி.மு.க வை சேர்ந்தவர்கள் எவ்வளவு கிரிமினல் வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை தினம்தோறும் செய்திகளில் பார்க்கிறோம்.

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு என்பது முழுவதுமாக சீர்கெட்டு இருக்கக் கூடிய ஒரு சூழ்நிலையை பார்க்கிறோம். அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிற உரிமைகளுக்கு கூட நீதிமன்றம் சென்று தான் அதனை அமல்படுத்த முடியும் என்கின்ற சூழலில், இன்று எதிர்கட்சிகள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது இது சட்டத்தின் ஆட்சி நடக்கிற மாநிலமா ?, திராவிட மாடல் அரசு என்பது எல்லோருக்குமான அரசு என்று பெருமை பேசிக்கொள்ளும் தி.மு.க அரசு, எதிர்க் கட்சிகளுடைய ஜனநாயக உரிமையை நசுக்க பார்க்கிறது.டெல்லி தேர்தல், முடிவுகளை உற்சாகத்தோடு எதிர்நோக்கி காத்து இருக்கிறோம். இம்முறை டெல்லியிலே மிகப்பெரிய மாற்றத்திற்கு மக்கள் தயாராகி இருக்கிறார்கள் என்பதை பிரச்சாரத்தின் போது எங்களால் உணர முடிந்தது. நல்ல ஒரு தீர்ப்பை இன்று அவர்கள் எழுத துவங்கி இருக்கிறார்கள். ஈரோடு கிழக்கு தேர்தலில் அத்தனை எதிர்க்கட்சிகளும் புறக்கணித்தும் நான் மட்டுமே சாம்பியன் என்று களத்தில் ஒற்றை ஆளாய் நின்று கொண்டு இருக்கிற தி.மு.க விற்கு ஈரோடு மக்கள் என்ன மதிப்பு அளிக்கிறார்கள் என்பதை பார்ப்போம் என்றார்.

.