2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி உறுதியாக வெல்லும் எனவும், அப்போது கிடைக்கவுள்ள அதிகமான திட்டங்களின் பலன்கள் கோவை கவுண்டமபாளையம் தொகுதிக்கு கிடைக்க இந்த கூட்டணி சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் இங்கு இருப்பது அவசியம் என காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சூரிய பிரகாஷ் இன்று தனது பிரச்சாரத்தில் பேசினார்.

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ள கே.பி.சூரிய பிரகாஷ் கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார்.
KAVUNDAMPALAYAM3
இன்று அவர் இத்தொகுதிக்கு உட்பட்ட துடியலூர் மேற்கு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பின் போது, தங்களது கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக அறிவித்துள்ள பல வாக்குறுதிகளை முன்னிறுத்தி ஆதரவு திரட்டினார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்டங்களை அறிவித்திருந்தார், அதில் பலவற்றை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறார் என்று கூறிய சூரிய பிரகாஷ், திராவிட மாடல் அரசு 2.0 அமைந்ததும் முன்பு அறிவித்திருந்த திட்டங்களை காட்டிலும் முதலமைச்சர் இரண்டு மடங்கு அதிகம் தர உள்ளார் எனக் கூறினார்.

மேலும் தமிழகத்தில் வீடில்லாதவர்களுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதை பற்றி பேசிய சூரிய பிரகாஷ், இதில் பெரும்பாலான வீடுகள் கோவை மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கவுண்டம்பாளையம் தொகுதி என்பது தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய தொகுதியாகவும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகவும் உள்ளது. எனவே இந்த தொகுதிக்கு நிறைய பலன்கள் வந்து சேர வேண்டும்.

திராவிட மாடல் 2.0 அரசில் அதிக திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என்பதால், இந்த திட்டங்களை முழுவதுமாக கவுண்டம்பாளையம் தொகுதிக்கு கொண்டு வர வேண்டும் என்றாலோ, எந்தவித இடையூறும் இல்லாமல் அதை செயல்படுத்த வேண்டும் என்றாலோ அதற்கு திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர் இங்கு இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

இம்முறை இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ‘கை’ சின்னத்தில் போட்டியிட தனக்கு வாய்வு வழங்கப்பட்டுள்ளது என கூறிய அவர், தன்னை தேர்ந்தெடுத்தால் கவுண்டம்பாளையம் தொகுதி மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள ஒரு பையனை, இளைஞனை எப்படி வேலை வாங்குவார்களோ அவ்வாறு தன்னை பயன்படுத்திக்கொள்ளலாம். “மக்களுக்கு முழுவதுமாக சேவை செய்யும் ஒரு நபராக இருப்பேன்,” என்று உறுதி அளித்தார்.