கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சி.எஸ்.ஆர் மருத்துவமனையின் 33ம் ஆண்டை முன்னிட்டு ‘சி.எஸ்.ஆர் சிங்கப்பெண் பிரசவத் திட்டம்’ துவக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தத் திட்டத்தை மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி.எஸ்.ஆர். குமார் தொடங்கி வைத்தார்.

தாய்மையைப் போற்றும் பாதுகாப்பான மற்றும் தரமான மகப்பேறு மருத்துவ சேவையை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் ரஜினி குமார், இயக்குனர் டாக்டர் சூரஜ் குமார்,

மகப்பேறு மருத்துவ ஆலோசகர் டாக்டர் மோகன பிரியா, மகப்பேறு மருத்துவர் மகளிர் நோய் நிபுணர் ஆலோசகர் டாக்டர் திவ்யா, மகப்பேறு மருத்துவ ஆலோசகர் டாக்டர் நிவேதா, செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சி.எஸ்.ஆர் சிங்கப்பெண் பிரசவத் திட்டம் குறித்து மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி.எஸ்.ஆர். குமார் கூறியதாவது:

சி.எஸ்.ஆர். நர்சிங் ஹோம் தொடங்கி 33 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய சமூகநலத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது.

தற்போது சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன் பிரசவம் தொடர்பாக பல்வேறு தவறான கருத்துகள் சமூகத்தில் பரவி வருகின்றன. சிலரின் தவறான செயல்களால் அனைத்து மருத்துவமனைகளும் ஒரே கண்ணோட்டத்தில் விமர்சிக்கப்படுகின்றன.

இதைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக ஏழை மற்றும் எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் “சிங்கப்பெண் மகப்பேறு திட்டம்” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்தத் திட்டம் தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கும் செல்ல வேண்டும் என்பதும் எங்களின் விருப்பமாகும்.

திட்டத்தின் கீழ், பொதுப் வார்டில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவமாக இருந்தாலும், சிசேரியன் பிரசவமாக இருந்தாலும், மருத்துவமனை கட்டணமாக ரூ.10,000 மட்டுமே வசூலிக்கப்படும்.

இந்தக் கட்டணத்தில் மூன்று நாட்கள் தங்கும் வசதி, அறுவைச் சிகிச்சை அரங்கக் கட்டணம், செவிலியர் கட்டணம், மயக்க மருத்துவ நிபுணரின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அடங்கும். எனினும், மருந்துச் செலவு மட்டும் நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்து தனித்தனியாக இருக்கும்.

இதில் பயன்பெற விரும்புவோருக்கு விண்ணப்பப் படிவம் வழங்கப்படும். அதைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்த பிறகு, அவர்கள் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவார்கள்.

ஆரம்ப கட்டமாக 250 நோயாளிகளை இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறச் செய்வதே எங்களின் இலக்காகும். இத்திட்டம் பொது வார்டில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே பொருந்தும். ஏழை, எளிய மக்களுக்கு இதன் பயன் சென்றடைய வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம்.

இத்திட்டம் இன்று, 12.06.2026 முதல் நடைமுறைக்கு வருகிறது. ஆரம்ப கட்டமாக 250 பேருக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு மேற்கொள்ளப்படும். அந்த 250 பதிவுகள் எவ்வளவு விரைவாக நிறைவடைகின்றன என்பதைப் பொறுத்து இந்த திட்டம் செயல்படும் எனத் தெரிவித்தார்.