கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் அவசர மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது.  கூட்டத்தில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டம் துவங்கிய பொழுது மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் மயானங்களில் நேரம் குறித்து விவாதிக்கப்பட்ட பொழுது குறுகிட்ட அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், அவசர மாமன்ற கூட்டத்தில் மயான நேரம் குறித்தான கேள்விகள் அவசியமா என ஆவேசமாக கேட்டார்.

அதற்கு மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, மேயர் கேள்விகள் முன்வைப்பது வழக்கமான ஒன்றுதான் என தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் தரம் பிரிப்பது குறித்து விவாதிக்கும் பொழுது அவை முறையாக செயல்படுத்தப்படுவதில்லை என அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கூறியதால் கூட்டத்திலிருந்து திமுக, காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட ஆளும் கட்சியில் கூட்டணி கட்சி கவுன்சிலர்களும் பிரபாகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கூறுகையில்: தமிழக முதல்வர் போட்டோ சூட் ஆட்சியை நடத்துவது போன்று கோவை மாநகராட்சி மேயரும் போட்டோ சூட் நடத்துவதாக விமர்சித்தார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் கோவை மாநகராட்சியில் உருப்படியாக எதுவுமே கொண்டு வரப்படவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் அனைத்தும் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது பராமரிப்பின்றி கிடக்கிறது என தெரிவித்தார்.