கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுக, பாஜக, தவெக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் துடியலூர் வெள்ளக்கிணறு அருகே அவர்கள் இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், போலீசார் அங்கு சென்றனர். அப்போது காவலரை தாக்கியதால், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். காலில் குண்டு பாய்ந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டனர்.
இந்தக் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி தரப்படும் என்று முதல் அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வழக்கு தொடர்பாக விசாரணை செய்வதற்காக கூடுதல் விசாரணை அதிகாரியாக, காவல் ஆய்வாளர் லதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ள ஏதுவாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
