கோவை ஓண்டிப்புதூர் அருகே சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது. ரூ.500 கோடி மதிப்பீட்டில் 30 ஏக்கர் பரப்பளவில் இந்த மைதானம் கட்டப்படும். சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பிறகு தமிழகத்தின் 2வது சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகும். தற்போது இதற்கான வடிவமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. முதல்வரின் ஒப்புதல் கிடைத்த பின்னர் கட்டுமான தொடங்கும் என தெரிகிறது.
ஆஸ்திரேலிய நகரத்தில் கிரிக்கெட், கால்பந்து, பொழுதுபோக்கு நிகழ்வுகளை நடத்தும் பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தை மாதிரியாகக் கொண்டுள்ளது. அதேபோல கோவையில் அமைய உள்ள மைதானத்திலும், இசை நிகழ்ச்சி, பெரிய நிகழ்ச்சிகள், பகல் மற்றும் இரவு நேர போட்டிகள் நடத்த ஏதுவாக இருக்கும் என விளையாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மைதானத்தின் விளையாட்டு பகுதி வடக்கு-தெற்கு திசையில் 140 மீ, கிழக்கு-மேற்கு திசையில் 170 மீ இருக்கும். போட்டியைப் பொறுத்து பவுண்டரி நீளம் மாறும். பொதுவாக பவுண்டரி தூரம் 60 முதல் 75 மீட்டர் வரை இருக்கும். சில இடங்களில் சேப்பாக்கம் மைதானத்தை விட சிறியதாகவும், சில இடங்களில் பெரியதாகவும் இருக்கும் என விளையாட்டுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் உள்ளது போல “சப் ஏர் டிரெய்னேஜ் சிஸ்டம்” அமைக்கப்பட உள்ளது.
இதனால் மழை பெய்தால், மைதானத்தில் இருந்து தண்ணீர் உடனடியாக வெளியற்றப்படும். அதன்படி மழை நின்ற 20 நிமிடங்களில் மைதானத்தில் உள்ள தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்படும்.
மொத்தம் 30,000 இருக்கைகள் அமையும். ஜாகிங் வசதி, நீச்சல் குளம் போன்ற வசதிகளும் அமைக்கப்படும். மேற்கு தமிழ்நாட்டில் கிரிக்கெட் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் மைதானம் கட்டப்பட உள்ளது. 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.