மேற்கு தமிழகத்தில் முதல் முறையாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 6 ஆண்டுகளில் 100 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இம்மருத்துவமனையில் 2017 ஜனவரியில் இந்த சேவைகள் துவங்கப்பட்டன எனவும், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் வழிகாட்டுதலில் செய்யப்படும் இந்த சிகிச்சை அப்போது நோயாளியின் பெற்றோர், சகோதர-சகோதரி, நெருங்கிய உறவினர் என்பவர்கள் மூலம் கிடைக்கும் உறுப்பு தானத்தை வைத்து செய்யப்பட்டது. 2020 பிப்ரவரி மாதம் முதல் மூளை சாவடைந்தவர்களிடமிருந்தும் சரியான வழிகாட்டுதல்படி, உறுப்புக்கள் தானம் பெற்று செய்யப்படும் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சேவை வழங்கப்பட்டது.
6 ஆண்டுகளில் 100 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள இம்மருத்துவமனை அதன் 100வது வெற்றிகரமான மாற்று அறுவை சிகிச்சையை, சனிக்கிழமை அன்று செய்தது. மூளை சாவடைந்த 55 பேரிடம் இருந்தும், நோயாளிகளின் உறவினர்கள் 45 மூலமாகவும் சிறுநீரகம் கொடையாக பெற்று இந்த சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவாகும். அதுவே முதலமைச்சர் மருத்துவ காப்பீடு இருந்தால் இலவசமாக செய்துகொள்ளலாம் என்பதால் அரசு மருத்துவமனையின் சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
