கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், போதிய அளவில் பயணிகளை கையாள மேற்கொள்ளப்பட்டு வரும் இடைக்கால விரிவாக்க பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விமான நிலையத்தின் தற்போதைய முனைய கட்டிடத்தில் ஒரே நேரத்தில் 675 பயணிகள் மட்டுமே காத்திருக்க முடியும். புதிய விரிவாக்க பணிகளின் மூலம் உள்நாட்டுப் பயணிகளுக்கான காத்திருப்பு பகுதி  920 சதுர மீட்டர் அளவிற்கு விரிவுபடுத்தப்படுவதால் கூடுதலாக 375 பயணிகள் வசதியாகக் காத்திருக்க முடியும்.

இதற்காக ரூ.13 கோடி மதிப்பீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் இந்தப் பணிகள் துவங்கின.கடந்த ஆகஸ்ட் 2026-க்குள் இதை முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நள்ளிரவு நேரங்களில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு, அதிகாலை 2.55 மணிக்கு புறப்படும் புனே விமானம் மற்றும் அதிகாலை 4 மணிக்கு புறப்படும் ஏர் அரேபியா சர்வதேச விமானம் ஆகியவற்றின் புதிய நேர மாற்றங்கள் சவாலாக அமைந்துள்ளன.

இதுபோல பிற நடைமுறை சவால்கள் உள்ளன. இதனால் பணிகள் சற்று நீண்டுகொண்டே சென்றன. இருந்தாலும் தற்போது இடைக்கால விரிவாக்க பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் முழுமையாக நிறைவடைய அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்துடன் விமான நிலையத்தில் அமையவுள்ள புதிய சர்வதேச முனைய கட்டிடத்திற்கான பணிகளை விரைந்து செயல்படுத்துவதில் தமிழக அரசும் இந்திய விமான நிலைய ஆணையமும் தொடர்ந்து தீவிரமாக உள்ளன எனவும் விமான நிலைய வட்டார தகவல்கள் கூறுகின்றன.
LULUTAKE scaled

16 லட்சம்+ பயணிகள் 

இந்திய விமான நிலைய ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் 2026 வரையிலான காலகட்டத்தில் கோவை விமான நிலையத்தில் 9,843 உள்நாட்டு விமானங்கள் மற்றும் 710 சர்வதேச விமானங்கள் என மொத்தம் 10,553 விமானங்கள் கையாளப்பட்டுள்ளன.

இதே காலகட்டத்தில் 15.21 லட்சம் உள்நாட்டு பயணிகள் மற்றும் 1.20 லட்சம் சர்வதேச பயணிகள் என மொத்தம் 16.41 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, நேற்று (நவ. 15) ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சர்வதேச பயணிகள் உட்பட மொத்தம் 11,000 பயணிகள் கோவை விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.