கோவை அருகே தென் கைலாயம் என்று போற்றப்படும் பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல இன்று (மே 13) முதல் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், மலைப்பாதைகளில் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை மட்டுமே பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏற அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலரின் பரிந்துரையின் பேரில், மழைக்கால பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாலும், மலைப்பாதைகள் வழுக்கும் தன்மை அடையக்கூடும் என்பதாலும், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று முதல் வெள்ளியங்கிரி மலைக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி யாரும் மலை ஏற முயற்சிக்க வேண்டாம் என்றும், அபாயகரமான சூழ்நிலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடைக்கால சீசன் நிறைவடையும் தருணத்தில் வெளியான இந்த அறிவிப்பு, ஆன்மீகப் பயணத்தைத் திட்டமிட்டிருந்த பக்தர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

