மத்திய அரசால் வெளியிடப்பட்ட ‘சுவெச் சர்வெக்‌ஷான்’ தூய்மை நகரங்கள் தரவரிசைப் பட்டியலில் கோவை மாநகராட்சி தேசிய அளவில் 28வது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.

மத்திய அரசால் கடந்த 2014ம் ஆண்டு ‘தூய்மை பாரதம்’ திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் உள்ளாட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகள், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, சுத்தம், சுகாதாரம் எந்தளவுக்கு பராமரிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி, மத்திய அரசின் சார்பில் 2024-25-ம் ஆண்டுக்கான தூய்மை கணக்கெடுப்புப் பணிகள் குறித்த சர்வே நாடு முழுவதும் எடுக்கப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுள்ள நகரங்களுக்கான பிரிவில், தேசிய அளவில் 28வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடமும் கோவை மாநகராட்சி பிடித்துள்ளது.

கோவை மாநகராட்சி தூய்மை நகரங்கள் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பெற்றிருப்பது இது 2வது முறை. கடந்த 2020ம் ஆண்டு மாநில அளவில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.