கோவை காந்திபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை திறந்து வைக்க முதலமைச்சர் விஜய் நாளை வருகை தரவுள்ளதை முன்னிட்டு, கோவை மாநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை விமான நிலையத்திலிருந்து காந்திபுரம் செல்லும் வழித்தடங்களில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, விமான நிலையம் முதல் நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரையிலான பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாளை காலை 11 மணிக்கு விமான நிலையம் வந்தடையும் முதலமைச்சர், காலை 11.45 மணிக்கு தந்தை பெரியார் திருவுருவச் சிலை மற்றும் ‘பெரியார் அறிவுலகம்’ கல்வெட்டைத் திறந்து வைக்கிறார். தொடர்ந்து, பெரியார் அறிவுலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் மையம், குழந்தைகள் நூலகம், டிஜிட்டல் நூலகம் உள்ளிட்ட வசதிகளைப் பார்வையிடுகிறார்.

இதையடுத்து, மதியம் நடைபெறும் விழாவில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், 100 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.

முதலமைச்சரின் வருகையையொட்டி விமான நிலையம் முதல் காந்திபுரம் செல்லும் வழித்தடங்களில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
