எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் வலிமையுடன் இந்தியா உள்ளது. தேர்தல் நேரத்தில் மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் சூழ்ச்சி அரசியல் எடுபடாது என பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 25 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் மேற்காசியப் போரால் உலகமே கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு கப்பல்கள் கொண்டு வரும் கடல் பாதைகள் மூடப்பட்டுள்ளதால் உலகெங்கும் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகள் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளன.
ஆனால், 140 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் நம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று உயர்ந்துள்ளது. ஈரான் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர தொடர்ந்து உரையாடி வருகிறார். அவர் மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கைகளால் ஹார்மூஸ் நீரிணை வழியாக இந்தியா கச்சா எண்ணெய் கப்பல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் சுமார் 30 கோடி குடும்பங்கள் சமையல் எரிவாயு இணைப்பை பெற்றுள்ளன. அதில் சுமார் 20 கோடி இணைப்புகள் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த 2014 முதல் வழங்கப்பட்டவை. வீடுகளுக்கு சமையல் எரியாயு தட்டுப்பாடு வந்து விடக்கூடாது குறிப்பாக குடும்பத் தலைவிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே, வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நெருக்கடியை எதிர்கொள்வதில் வல்லவர் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா காலகட்டத்தில் பார்த்தார்கள். கொரோனா பொதுமுடக்கத்தால் 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா பேரழிவை சந்திக்கும் என உலகமே கணித்தது. ஆனால், அந்த பேரிடரை திறமையாக எதிர்கொண்ட பிரதமர் மோடி, 40க்கும் அதிகமான நாடுகளுக்கும் தடுப்பூசி உள்ளிட்ட உதவிகளை செய்தார்.
அதுபோலவே மேற்காசிய போர் நெருக்கடியையையும் பிரதமர் மோடி எதிர்கொள்வார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். எனவே, இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவலைப்பட வேண்டும். வளைகுடா நாடுகளில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மோடி அரசு மீட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என வதந்தி பரப்பியவர்களின் முகத்திரை இரண்டு நாட்களில் கிழிந்ததை நாட்டு மக்கள் அறிவர். சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடின்றி கிடைத்து வருகிறது. பதுக்கலை தடுக்கவே கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கடந்த 12 ஆண்டுகால மோடி ஆட்சியில் மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது. அதனால், எந்த நெருக்கடியையும் இந்தியா சமாளிக்கும். எனவே, தேர்தல் நேரத்தில் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சூழச்சி அரசியல் மக்களிடம் எடுபடாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
