தேர்தலில் தி.மு.க.வின் அடித்தளமாக செயல்படும் பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கோவையில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அப்போது அவர் கோவை காந்திபுரம் – டவுன் பஸ் ஸ்டாண்ட் பகுதி அருகே உருவாகியுள்ள பெரியார் அறிவுலகத்தை துவக்கி வைப்பார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
ரூ.300 கோடி செலவில், 6.98 ஏக்கர் நிலத்தில், 1.98 லட்சம் சதுரடி பரப்பளவில், 7 தளங்கள் கொண்டதாக அமைந்துள்ளது. 1 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களை வாசகர்களுக்கு வழங்கும் இடமாகவும், கோளரங்கம், ஏ.ஐ., ரோபோடிக்ஸ் போன்ற அறிவியல் தொடர்பான அம்சங்கள் நிறைந்த அறிவியல் மையமாகவும் இந்த பிரம்மாண்ட வளாகம் தமிழக அரசின் பொதுப்பணி துறையால் கட்டப்பட்டுள்ளது.
புத்தகங்களுக்காக மட்டும் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டு, அவை இந்த நூலகத்தில் வைக்கப்படவுள்ளது. அனைவருக்காமான நூலகமாக இது இருக்கவேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு,அறிவியல் மற்றும் இலக்கிய புத்தக விரும்பிகளுக்கு, போட்டி தேர்வுகளுக்கு தயாராவோருக்கு என அனைவர்க்குமான நூலகமாக இருக்கும்.
மேலும் இந்த நூலகத்தில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து, படிக்கக்கூடியபடி வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. பார்வை திறன் குறைவு உள்ளவர்கள் வசிக்கக்கூடிய பிரெய்லி வகை புத்தகங்கள் இடம்பெறுகின்றன.
தரைத்தளத்தில் கோளரங்கம் மற்றும் விண்வெளி பயண அனுபவத்தை வழங்கக்கூடிய தனித்துவமான லிப்ட் வசதி; முதல் தளத்தில் கீழடி அகழ்வாய்வு பகுதி தொடர்பான மாதிரிகளுக்கு இடம் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றை எளிதாக கற்கக்கூடிய அம்சங்கள், 2ம் தளம் முதல் 4ம் தளம் வரை நூலகங்கள், 5 மற்றும் 6ம் தளத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்துறைக்கான திறன்மிகு மையங்கள், 7ம் தளத்தில் செயற்கை நுண்ணறிவும் ரோபாட்டிக்ஸ், ஏ.ஆர்., வீ.ஆர். போன்ற வாசதிகள் கொண்ட அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலக வசதிகள் வழங்கப்படுகிறது.
