கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெறும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக, மேட்டுப்பாளையம்-போத்தனூர் மெமு ரயில் சேவையில் இன்று (செப் 21) முதல் 24-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேட்டுப்பாளையத்தில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்குப் புறப்படும் மெமு ரயில் (66615), இந்த நாள்களில் மேட்டுப்பாளையம்-கோவை இடையே மட்டுமே இயக்கப்படும். கோவை-போத்தனூர் இடையேயான சேவை ரத்து செய்யப்படும்.
அதேபோல், போத்தனூரில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்படும் மெமு ரயில் (66616), கோவை-மேட்டுப்பாளையம் இடையே மட்டுமே இயக்கப்படும். போத்தனூர்-கோவை இடையே ரத்து செய்யப்பட உள்ளது.
பராமரிப்புப் பணிகளால் பிலாஸ்பூர்-எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் (22815), செப்டம்பர் 22ம் தேதி இருகூர்-போத்தனூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இதனால் கோவை ரயில் நிலையத்துக்குச் செல்லாது. அதற்கு பதிலாக போத்தனூரில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்படும்.
இதேபோன்று, பிலாஸ்பூர்-திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (22619) செப்டம்பர் 23-ம் தேதியும், திருநெல்வேலி-லோக்மான்ய திலக் வாராந்திர சிறப்பு ரயில் (22630) செப்டம்பர் 24-ம் தேதியும் மாற்றுப்பாதையில் இயக்கப்படும். பாட்னா–எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயிலும் (22670) இருகூர்-போத்தனூர் வழியாக இயக்கப்படும்.
செப்டம்பர் 21-ம் தேதி கோவையில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்குப் புறப்பட வேண்டிய கோவை-ஜபல்பூர் சிறப்பு ரயில் (02197), அன்று பிற்பகல் 3.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு ஜபல்பூர் செல்லும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
