கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் ரூ.30 கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளது. ஐ.ஐ.டி மெட்ராஸால் சரிபார்க்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநில அரசின் தொழில்நுட்ப அனுமதிக்காக தற்போது காத்திருக்கிறது.
இந்த பேருந்து நிலையத்தில் இருந்து ஆனைகட்டி, அவினாசி, மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளுக்கும், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் சத்தியமங்கலம் போன்ற நீண்ட தூர வழித்தடங்களுக்கும் பேருந்துகள் இயங்குகின்றன. அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் பேருந்து நிலையத்தில் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். காத்திருக்கும் பகுதியில் இருக்கைகள் இல்லாமல் உள்ளது. கட்டிடத்தின் சில பகுதிகளில் சேதம் காணப்படுகிறது. மழையின் போது வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு நீர் தேங்குவதால் பயணிகள் நடப்பதற்கு சிரமம் உள்ளது. கழிப்பறையில் கட்டணம் வசூலித்தாலும், பராமரிப்பு மோசமாக இருப்பதாக பயணிகள் புகார் கூறுகின்றனர்.
இந்த நிலையில், மத்திய பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் திட்டத்தில், முன்மொழியப்பட்ட மறுமேம்பாட்டிற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க கோவை மாநகராட்சி, தனியார் நிறுவனத்தை ஈடுபடுத்தியது. 90 பேருந்து நிறுத்துமிடங்கள், 20 பெரிய வணிகக் கடைகளைக் கொண்ட தரை மற்றும் ஒரு நிலை கட்டமைப்பு அமைக்கப்படும் என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் 2,014 இரு சக்கர வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு பார்க்கிங் திட்டங்களும் இதில் அடங்கும்,
இந்த வடிவமைப்பில் 360 இருக்கைகள், நான்கு படிக்கட்டுகள் மற்றும் லிப்ட்கள், 5 குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அரங்குகள், 8 கழிப்பறைகள், 7 உணவு அறைகள், 3 கட்டுப்பாட்டு அறைகள், சிசிடிவி அறை, ஏவி அறை, பராமரிப்பு, டிக்கெட் வழங்குதல், அஞ்சல் சேவைகள் மற்றும் துறை அலுவலகங்களுக்கு நியமிக்கப்பட்ட பகுதிகள் ஆகியவை அடங்கும்.
இந்தத் திட்டத்திற்கான நிதி, உள்ளூர் திட்டமிடல் ஆணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், தொழில்நுட்ப அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.